பிரான்ஸில் கடந்த மூன்று மாத காலத்தின் பின்னர் முதல் முறையாக ஒரு நாள் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை

இன்று இரண்டு லட்சத்தைத் தாண்டியுள்ளது. புதிய சுகாதார அமைச்சர் பிரான்ஷூவா பிரவுண் (François Braun) இத்தகவலை நாடாளுமன்றத்தில் வெளியிட்டிருக்கிறார்.



ஒமெக்ரோன் வைரஸின் இரண்டு உப திரிபுகளாகிய பிஏ4 மற்றும் பிஏ5

(BA.4 / BA.5) ஆகியன கடந்த மே மாதம் முதல் ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிப் புதிய தொற்றலைகளை

உருவாக்கிவருகின்றன. பிரான்ஸில் கடந்தவாரம் முழுவதும்

சராசரி ஒரு லட்சத்து 20 ஆயிரமாக

இருந்துவந்த ஒருநாள் தொற்றுக்களின் எண்ணிக்கை இந்த வாரம் மேலும் அதிகரித்து இன்று இரண்டு லட்சம் என்ற கோட்டைத் தாண்டிவிட்டது. மருத்துவமனை அனுமதிகளும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. கோடை விடுமுறைக் காலத்தில் இது ஒரு பெரும் அலையாக - ஏழாவது தொற்றலையாக - மாறுமா என்ற

கேள்விகள் மருத்துவ வட்டாரங்

களில் எழுப்பப்படுகின்றன.

ஆனால் புதிய வைரஸ் திரிபுகள் எந்தளவுக்குத் தீவிரமான சமூகத் தொற்றாக மாறும் என்பதை இப்போதே சரியாகக் கணிப்பிட்டு எதிர்வு கூற முடியாதுள்ளது என்று தொற்றுநோய் நிபுணர்கள் ஒப்புக் கொள்கின்றனர். புதிய தொற்றலையின் தாக்கம் தொடர்பில் அறிவியல் நிபுணர் குழுவும் "நிச்சயமற்ற" பதிலையே

வழங்கியிருக்கிறது.



நாட்டில் பாரிஸ் பிராந்தியமே தொற்றுக்களில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

சனநடமாட்டம் நிறைந்த பொது இடங்களிலும் போக்குவரத்துகளிலும் பொறுப்புணர்ச்சியுடன் மாஸ்க் அணிந்து உங்களையும் அடுத்தவரையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று அரசு மக்களைக் கேட்டுள்ளது.



இதேவேளை -



பெருந் தொற்றுநோய் பரவிய சமயத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட மருத்துவ அறிவியலாளர் குழு (The Scientific Council)அதன் பணிகளை ஜூலை 31 ஆம் திகதியுடன் நிறைவு செய்யவுள்ளது. அதன் இடத்துக்குப்

புதிதாகச் சுகாதார அபாயங்களைக் கண்காணித்து மதிப்பீடு செய்யும் குழு (committee for monitoring and anticipating health risks) ஒன்றை அரசு நியமிக்கவுள்ளது. ஓகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதிவரை இந்தக் குழுவே வைரஸ் தொற்றுநோய் நிலைவரத்தைக் கண்காணிக்கும்.