2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 திகதி பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் 

தொடங்குவதற்குச் சரியாக இன்னும் இரண்டு வருடங்கள் உள்ள நிலையில் அதற்கான ஏற்படுகள் 

இப்போதே களை கட்டத் தொடங்கிவிட்டன.


திங்களன்று அதிபர் மக்ரோன் தலைமையில் எலிஸே மாளிகையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சர்கள்

மற்றும் ஒலிம்பிக் குழு அதிகாரிகள் 

கலந்துரையாடியுள்ளனர். 


கூட்டத்துக்குப் பின்னர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான பொதுவான உத்தியோகபூர்வ சுலோகம் வெளியிடப்பட்டுள்ளது. 

பிரெஞ்சு மொழியில்"Ouvrons grand les Jeux." என்றும் ஆங்கிலத்தில் "Let's open the Games wide" என்றும் அந்த சுலோக வாக்கியம் 

அறிவிக்கப்பட்டுள்ளது. 


உள்ளரங்குகளில் இதுவரை நடைபெற்றுவந்த ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாக்களைப் போலன்றி பாரிஸ் ஒலிம்பிக் முதல் முறையாக ஒரு மாபெரும் திறந்த வெளி நிகழ்வாக நடத்தப்படவிருப்பது தெரிந்ததே. நகரின் மத்தியில் செய்ன் நதியில் 

நூற்றுக் கணக்கான மிதவைப்

படகுகளில் சுமார் ஆறாயிரம் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்குகொள்கின்ற ஆரம்ப விழா மிகப் பிரமாண்டமான கண்கவர் 

காட்சிகளோடு நடத்தப்படவுள்ளது. 

தொடக்க நிகழ்வைக் கண்டு ரசிப்பதற்காக உலகெங்கும் இருந்து ஒரே சமயத்தில் சுமார் பத்து லட்சம் பார்வையாளர்கள் நகரில் திரள்வர் என்று எதிர்பார்க்கப்படுவதால் நகரின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக் கட்டமைப்புகளின்

வசதி என்பன தொடர்பிலான பல சவால்கள் குறித்து இப்போதிருந்தே 

கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. 


கொரோனா முடக்கங்கள், உக்ரைன் 

யுத்தம் என்பவற்றால் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதாரச் சரிவுகளுக்கு மத்தியில் பிரான்ஸ் அதன் பெருமையைப் பறைசாற்றும் விதத்தில் இந்த உலக விளையாட்டு

விழாவை நடத்திமுடிப்பதில் பெரும் நிதிச் சவால்களும் பின்னணியில் உள்ளன. அதனால் விழா ஏற்பாடுகளின் விஸ்தீரணத்தைக் குறைக்கவேண்டிய நிலைமை ஏற்படுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. 


ஒலிம்பிக் போட்டிகள் அதனைத் தொடர்ந்து நடைபெறுகின்ற பரா

ஒலிம்பிக் போட்டிகள் இரண்டுக்கும் பொதுவாக 13 மில்லியன் நுழைவுச் சீட்டுகளை விநியோகிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 

சுமார் ஒரு மில்லியன் நுழைவுச் சீட்டுக்கள் சலுகை அடிப்படையில் 

24 ஈரோக்களாக விற்பனை செய்யப்படவுள்ளன. விளையாட்டு நிகழ்வுகளைப் பொறுத்து ரிக்கெற் கட்டணங்கள் 200 ஈரோக்கள் வரை 

இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரிக்கெற் விற்பனை அதற்கான இணையத் தளம் மூலம் அடுத்த ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்படும். 


சுமார் நான்கு லட்சம் நுழைவுச் சீட்டுகளை அரசு வாங்கும். அவற்றை 16 வயதுக்குட்பட்ட இளையோருக்குக் கட்டணமின்றி வழங்குவதற்கு அதிபர் 

மக்ரோன் விருப்பம் தெரிவித்துள்ளார் என்று அறிவிக்கப்படுகிறது.