மூன்று சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று புதன்கிழமை காலை இச்சம்பவம் Ain மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

சிறிய கிராமமான Dover (Ain) பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 22 வயதுடைய ஆயுததாரி ஒருவன் அங்குள்ள தனது வீட்டுக்குள் நுழைந்து வீட்டில் இருந்த அனைவரையும் வாள் ஒன்றினால் கண்மூடித்தனமாக வெட்டி சாய்துள்ளான். இதில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவனின் தந்தை, மாமியார், 17 வயதுடைய சகோதரி, 15 வயதுடைய தம்பி மற்றும் 5 வயதுடைய சகோதரி என மொத்தம் ஐவரை படுகொலை செய்துள்ளான்.

சம்பவ இடத்துக்கு அதிரடிப்படையினர் (IGPN) வந்திருந்தபோது வீடு முழுவதும் இரத்தம் தெறித்து மிக கொடூரமாக காட்சியளித்துள்ளது.

கொலையாளியை அதிரடிப்படையினர் கைது செய்யமுற்படும் போது, அவன் மிக மூர்க்கத்தனமாக அதிகாரிகள் மீது பாய்ந்துள்ளான். இதனால் அதிகாரிகள் துப்பாக்கிச்சூட்டு நடத்தி அவனை சுட்டுக்கொன்றனர்.

மேற்படி சம்பவம் அக்கிராமம் முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட ஜொந்தாமினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொலையாளி நீண்ட வாள் ஒன்றையும், ரைஃபிள் துப்பாக்கி ஒன்றையும் பயன்படுத்தி படுகொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.