நாளை வியாழக்கிழமை ஜூலை 14, தேசிய நாள் நிகழ்வுகளுக்காக தலைநகர் பரிஸ் பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
Champs-Elysées நிகழ்வுகள், ஈஃபிள் கோபுர வானவேடிக்கை நிகழ்வுகள், Champs-de-Mars நிகழ்வுகள் என அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூட உள்ள இந்த நிகழ்வுகளின் போது, அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறாமல் தடுக்க பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக தலைநகர் பரிசில் காவல்துறையினர், ஜொந்தாமினர் என மொத்தம் 12,000 அதிகாரிகள் கடமையில் ஈடுபட உள்ளனர்.
Champs-Élysées, Place de l'Etoile, Louvre Museum, Invalides, Place de la Concorde, Champ-de-Mars, Trocadéro மற்றும் Eiffel கோபுரம் ஆகிய பகுதிகள் உச்சக்கட்ட பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதேவேளை, பல்வேறு மெற்றோ நிலையங்களும் மூடப்பட உள்ளன. Charles-de-Gaulle-Étoile (RER A, metro), George V, Franklin D. Roosevelt, Champs-Élysées Clemenceau, Concorde மற்றும் Tuileries ஆகிய மெற்றோ நிலையங்கள் மூடப்பட உள்ளதாக அறிய முடிகிறது.
இவை தவிர, Champ de Mars-Tour Eiffel, Passyet Pont de l'Alma நிலையங்கள் மாலை 3 மணியில் இருந்தும், Trocadéro, Bir-Hakeim, Alma-Marceau மற்றும் École militaire நிலையங்கள் மாலை 7 மணியில் இருந்தும் மூடப்பட உள்ளன.
தேசிய நாள் நிகழ்வுகளை காண வருபவர்கள் இரண்டு கட்ட பரிசோதனைகளை சந்திக்க உள்ளனர். பார்வையாளர்கள் கொண்டுவரும் பொதிகள், பைகள் போன்றவையும் கட்டாயமாக சோதனையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.