பிரான்ஸின் பெரு நிலப்பரப்பில் குரங்கு அம்மை வைரஸ் தொற்றினால் பாரிஸ் பிராந்தியமே அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளது.
அங்கு சுமார் ஆயிரத்து 300 தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். நாளாந்தம் 60 முதல் 70 வரையான புதிய தொற்றுக்கள் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன.
நாட்டின் பொதுச் சுகாதார நிர்வாகம் இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.
பாரிஸ் தொற்றாளர்களில் பலரும் ஒன்றுக்கு மேற்பட்டோருடன் அல்லது ஓரினப் பாலியல் தொடர்பை வைத்துள்ள ஆண்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அத்தகையோருடன் உடலுறவு கொள்கின்ற பெண்களுக்கும் அம்மை வைரஸ் தொற்றியுள்ளது.
கர்ப்பிணிப் பெண்கள் சிலரும் அதில் அடங்கியுள்ளனர். அம்மை தொற்றிய குழந்தை ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அது எவ்வாறு ஏற்பட்டது என்பதை அறியும் விசாரணைகள் இன்னமும்
நடைபெற்று வருகின்றன.
அதேவேளை ஆப்பிரிக்காவுக்கு வெளியே முதலாவது குரங்கு வைரஸ் மரணம்
பிறேசில் நாட்டில் பதிவாகி இருப்பதாக அறிவிக்கப்படுகிறது.
உடல் எதிர்ப்புச் சக்திக் குறைபாடுடைய 41 வயதான ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார். பிறேசிலில் சுமார் ஆயிரம் பேருக்கு
குரங்கு அம்மை தொற்றியுள்ளது
என்ற தகவலை அந்நாட்டின் செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
குரங்கு வைரஸுடன் தொடர்புடைய மற்றொரு உயிரிழப்பு ஸ்பெயினில்
நிகழ்ந்துள்ளது. அது இன்னமும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆபிரிக்காவின் சில பகுதிகளில்
மாத்திரம் உள்ளூர் தொற்று நோயாக இருந்து வந்த குரங்கு அம்மை கடந்த மே மாதம் முதல் உலகம் முழுவதும் பரவுகின்ற தொற்று நோயாக மாறியுள்ளது.
75 நாடுகளில் சுமார் 18 ஆயிரம் பேர்
அடையாளம் காணப்பட்டதை அடுத்து உலக சுகாதார நிறுவனம் கடந்த சனியன்று குரங்கு அம்மை
நோயைச் சர்வதேச சுகாதார அவசரகால நிலையாகப் பிரகடனம்
செய்தது.
அதிக காய்ச்சல், நிணநீர் வீக்கம் மற்றும் உடலில் - குறிப்பாகப் பாலுறுப்புப் பகுதிகளில்- சொறி என்பன குரங்கு அம்மை நோய்த் தொற்றின் ஆரம்ப அறிகுறிகள் ஆகும்.
இதேவேளை -
பெரியம்மைக் குடும்பத்தைச் சேர்ந்த குரங்கு அம்மை வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி ஏற்றம் நடவடிக்கைகள் பாரிஸ் பிராந்தியத்தில் முடுக்கி விடப்பட்டுள்ளன. 18 இடங்களில்
தடுப்பூசி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தொற்றுச் சூழ்நிலையில் இருப்போர், தொற்றாளர்களுடன் தொடர்புடையோர் மற்றும் நோயாளர்களைப் பராமரிக்கும் மருத்துவப் பணியாளர்கள் அடங்கலாக சுமார் 8 ஆயிரம் பேருக்குப் பெரியம்மைத்(smallpox) தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.