உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பியப் பிராந்தியத்தில் குரங்கு அம்மைத் தொற்றாளர்களது
எண்ணிக்கை வேகமாக அதிகரித்து
வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஆய்வு கூடப் பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்களின் எண்ணிக்கை (laboratory-confirmed cases) 4ஆயிரத்து 500 க்கும் அதிகம் என்றும், கடந்த இரண்டு வாரங்களில் தொற்றுக்கள் இரண்டு மடங்காக அதிகரித்திருப்பதாகவும்
உலக சுகாதார அமைப்பு (World Health Organization - WHO) தெரிவித்திருக்கிறது.
வரும் வாரங்கள், மாதங்களில் அம்மைத் தடுப்பு நடவடிக்கைகளை இயன்றளவு முடுக்கி விடுமாறு சுகாதார நிறுவனத்தின் பிராந்தியப் பணிப்பாளர் ஐரோப்பிய நாடுகளுக்கு அவசர ஆலோசனை
வழங்கியுள்ளார்.
குரங்கு அம்மை நிலைவரம் இன்னமும் உலகளாவிய சுகாதார அவசரகால நெருக்கடி நிலையை எட்டவில்லை என்றாலும் அதன் பரவல் வேகம் கவலை அளிப்பதாக
சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
இதற்கிடையில் ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் (European Medicines Agency - EMA) குரங்கு அம்மை நோயாளர்களுக்காகப் புதிய பெரியம்மைத் தடுப்பூசி(human smallpox vaccine) ஒன்றைப் பரிசோதித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸின் ஆகப்பிந்திய புதிய திரிபுகள் ஐரோப்பாவில் இம்முறை
கோடை காலத்தில் புதிதாகத் தொற்று அலைகளை உருவாக்கும் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. பிரான்ஸில் நாளாந்தம் வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து
வருகின்றது.கடந்த சில நாட்களாக மருத்துவமனை அனுமதிகளிலும் உயர்வு ஏற்பட்டுள்ளது.