பிரான்ஸின் தேசிய உணவுப் பாதுகாப்பு முகவரகம்(ANSES - national agency for food safety) இன்று விடுத்துள்ள ஓர் அறிக்கையில், மஞ்சள்(turmeric) அடங்கிய உணவுப் பொருள்களை - குறிப்பாக மாத்திரைகளை - அதிகம் உட்கொள்வதால் ஏற்படக்கூடிய ஆபத்துக் குறித்து எச்சரிக்கை செய்துள்ளது. 

இத்தாலியிலும் பிரான்ஸிலும் அதிகரித்து வருகின்ற கல்லீரல் 
நோயாளிகள் மத்தியில் நடத்தப்பட்ட 
ஆய்வுகளில் அவர்களில் பலருக்கு 
கல்லீரல் வீக்கம் (hepatitis) ஏற்பட்டதற்கு அவர்கள் அளவுக்கு அதிகமான மஞ்சள் மாத்திரைகளை உட்கொண்டமைக்குத் தொடர்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது
என்று தெரிவிக்கப்படுகிறது. 

இயற்கை மஞ்சளில் உள்ள அதன் பிரகாசமான மஞ்சள் வர்ணத்தைத் தருகின்ற குர்குமின் (curcumin) என்ற பதார்த்தம் நாள் ஒன்றுக்கு ஒருவரது உடலில் சேரக் கூடிய அளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி அறுபது கிலோ கிராம் நிறையுடைய ஒருவர் நாளொன்றுக்கு 153 மில்லி கிராம் (153mg) என்ற அளவுக்குக் குறைந்த மஞ்சளையே உட்கொள்ள வேண்டும் என்பதை உணவுப் பாதுகாப்பு நிறுவனம் நினைவுபடுத்தியுள்ளது. 

சமையலில் மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படும் மஞ்சள் செமிபாட்டை - செரிமானத்தை- இலகுபடுத்தும் பித்தச் சுரப்பைத் தூண்டுவதுடன் உடலின் அழர்ச்சி எதிர்ப்புப் பண்பை ஊக்குவிப்பதற்கு அவசியமான ஒர் உணவுப் பொருள் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள உணவுப் பாதுகாப்பு நிறுவனம், உணவோடு அளவாகக் கலந்து பயன்படுத்தப்படும் தரமான மஞ்சள் துளினால் ஆபத்து எதுவும் இல்லை என்றும் ஆனால் உணவுக்கு மேலதிகமாக - ஆரோக்கியம் எனக் கருதி - மஞ்சள் கலந்த பலவித மருந்து மாத்திரைகளை வாங்கிக் கட்டுப்பாடின்றி அதிகளவில் உட்கொள்வது கல்லீரலைப் பெரிதும் பாதிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும்
தெரிவித்துள்ளது. 

இயற்கை மஞ்சளை அதன் நோய் எதிர்ப்பு முக்கியத்துவம் கருதிப் 
பலரும் குடிநீர் மற்றும் மாத்திரைகள் போன்ற வேறு உணவு வடிவங்களில் வாங்கி உட்கொண்டுவருகின்றனர். கொரோனா பெருந் தொற்றுக் காலப் பகுதியில் உலகெங்கும் மஞ்சள் பாவனை திடீரென அதிகரித்து அதற்குப் பெரும் கிராக்கியும் தட்டுப்பாடும் ஏற்பட்டது நினைவிருக்கலாம். 

ஆசிய நாடுகளில் பொதுவாக தமிழர்களது சமையல் கலைப் பாரம்பரியத்தில் இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சள் கிழங்கின் தூளுக்கு
மருத்துவரீதியான மிகுந்த முக்கியத்துவம் இருந்துவருகிறது.