"பொதுப் போக்குவரத்துகளில் மீண்டும் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள்" என்று பிரான்ஸின் புதிய சுகாதார அமைச்சர் பிரிஜித் பூர்ஹினியோன் (Brigitte Bourguignon) பொதுமக்களிடம் கேட்டிருக்கிறார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்
தோன்றி உரையாடிய அவர்,"பொதுப் போக்குவரத்துகளில் மீண்டும் மாஸ்க் அணியுமாறு பிரெஞ்சு மக்களைக் கோருகிறேன். அவ்வாறு செயற்படுவதற்கான சரியான வேளை இது என்று கருதுகிறேன்" எனக் கூறினார்.
"இது கட்டாயமல்ல. எந்த நிர்ப்பந்தமும் அல்ல. ஆனால் ஒரு நற்பிரஜைக்குரிய கடப்பாடு போன்ற செயல் அது" என்று அவர் தனது கோரிக்கைக்கு விளக்கம் அளித்துள்ளார். சனக் கூட்டம் அதிகம் உள்ள ரயில் நிலைய மண்டபங்கள் மற்றும் ரயில்களில் மாஸ்க் அணிந்து உங்களையும் அடுத்தவர்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பஸ், ரயில்கள், மெற்றோ, வாகனங்கள் போன்றவற்றில் மாஸ்க்
அணியவேண்டும் என்ற கட்டாய சுகாதார விதி கடந்த மே மாதம் 16 ஆம் திகதி முதல் முற்றாக விலக்கிக்கொள்ளப்பட்டிருந்தது.
ஆனாலும் மிகக் குறுகிய கால இடைவெளியில் மீண்டும் அதனை அணிந்து பாதுகாப்புத் தேட வேண்டிய நிலைமை நாட்டில் மீள
உருவெடுத்துள்ளது.
ஒமெக்ரோன் திரிபின் பிஏ.5 (BA.5) என்ற உப திரிபு (Omicron subvariant) நாட்டில் புதிதாக ஒரு தொற்றலையைத் தோற்றுவிக்கும் அளவுக்கு வேகமாகப் பரவி வருகிறது.