மதுபான விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகறாரில் ஒன்பது பேருக்கு கத்திக்குத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் சனிக்கிழமை நள்ளிரவு Saint-Brévin-les-Pins (Loire-Atlantique) நகரில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள பிரபல இரவு நேர மதுபான விடுதி ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, மதுபான விடுதி காவலர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை விடுதியை விட்டு வெளியேற்றினர்.
விடுதி வாசலுக்கு வந்த அவர்கள், வாக்குவாதத்தை வன்முறையாக மாற்றினார்கள் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக்கொண்டனர்.
உடனடியாக காவல்துறையினரும், தீயணைப்பு படையினரும் அழைக்கப்பட்டனர்.
நள்ளிரவு 1.30 மணிக்கு காவல்துறையினர் சம்பவ இடத்தினை வந்தடைந்தபோது நிலமை கைமீறிச் சென்றிருந்தது.
மொத்தமாக ஒன்பது பேருக்கு கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அவர்களில் அனேகம் பேர் நெஞ்சுப்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 31 வயதுடைய ஒருவர் உயிருக்கு போராடி வருவதாகவும், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.
காயமடைந்த அனைவரும் 21 தொடக்கம் 33 வயதுக்குட்பட்டவர்கள் என அறிய முடிகிறது. சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை உள்ளூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.