ஆயுத முனையில் பேருந்து சாரதி ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பரிசில் கடந்த சனிக்கிழமை 12 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. இரவு 10 மணி அளவில் 29 ஆம் இலக்க பேருந்து Nation- Saint-Lazare நிலையங்களுக்கிடையே பயணித்துக்கொண்டிருக்கும் போது, பேருந்தில் இருந்த இரு பயணிகள் அப்பேருந்தின் சாரதியை ஆயுத முனையில் மிரட்டியுள்ளனர். பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளும் வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்டு மீண்டும் பேருந்து பயணித்துள்ளது.
இறக்கிவிடப்பட்ட பயணிகளில் பேருந்து சாரதியின் மனைவியும் இருந்துள்ளார்.
பேருந்தோடு சேர்த்து அதன் சாரதியையும் கடத்திச் சென்றவர்கள், அங்கிருந்து சில கிலோமீற்றர்கள் சென்று மகிழுந்தை நிறுத்தியுள்ளனர். பின்னர் அவர் மீது சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அதற்கிடையில் பயணிகளும், சாரதியின் மனைவியும் காவல்துறையினரை அழைக்க, அவர்கள் மிக விரைவாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர்.
அங்கு சாரதியை தாக்கிவிட்டு - தாக்குதலாளிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். சாரதி மீட்கப்பட்டு 10 ஆம் வட்டாரத்தில் உள்ள Lariboisière மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விசாரணைகளை 12 ஆம் வட்டார காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.