இன்று இரண்டாவது நாளாக, ஐரோப்பிய நாட்டுத் தலைவர்கள் ஒன்றுகூடும் விசேட போர்க்கால மாநாடு இடம்பெற்று வருகின்றது.

château de Versailles அரங்கில் நேற்று வியாழக்கிழமை இந்த மாநாடு ஆரம்பித்திருந்தது. இரஷ்யா-உக்ரைன் யுத்தத்தை அடுத்து ‘போர்க்கால நெருக்கடிகளை கூட்டாக சேர்ந்து சமாளிப்பது’ தொடர்பாக கலந்தாலோசிக்க இந்த மாநாடு இடம்பெற்று வருகின்றது. இதில் 27 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

ஏன் château de Versailles??

பரிஸ் புறநகரில் உள்ள இந்த வெர்சாய் அரண்மனையினை (château de Versailles) சந்திப்புக்காக இம்மானுவல் மக்ரோன் தேர்ந்தெடுத்துள்ளார்.

சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் இடமான இந்த அரண்மனையில் இந்த சந்திப்பு இடம்பெறுவதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பு முதலாம் உலக யுத்தம் நிறைவுக்கு வந்திருந்த போது, சமாதான உடன்படிக்கை இந்த வெர்சாய் அரண்மனையிலேயே இடம்பெற்றது.

அதேபோல், மக்ரோன் ஜனாதிபதியாக பதவியேற்று, முதல் வெளிநாட்டு தலைவராக விளாடிமிர் புட்டினை சந்தித்தார். 2017 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இந்த சந்திப்பு இந்த வெர்சாய் அரண்மனையிலேயே இடம்பெற்றிருந்தது.

இதன் காரணங்களால் மேற்படி அரண்மனையை மக்ரோன் தேர்ந்தெடுத்திருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை., இந்த சந்திப்பில் யுத்த நிறுத்தம் தொடர்பாகவோ, சமாதான உடன்படிக்கைகள் தொடர்பாகவோ எந்த வித முடிவுகளும் எட்டப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் இரஷ்ய தரப்பில் இருந்து யாரும் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.