பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின்னர், இன்று மீண்டும் Arc de Triomphe இல் ஐரோப்பிய கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

Versailles நகரில் ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு இடம்பெறுவதை அடுத்து, இந்த ஐரோப்பிய கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் 26 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைச் சந்திக்கிறார்.

உக்ரைன் மீதான இரஷ்யாவின் படையெடுப்புக்குப் பின்னர் இந்த மாநாடு மிக அவசியம் வாய்ந்ததாக உள்ளது. இந்த மாநாட்டை பிரதிபலிக்கும் முகமாக இந்த ஐரோப்பிய நீல கொடி Arc de Triomphe கட்டிடத்தின் கீழே பறக்கவிடப்பட்டுள்ளது.
**

அதேவேளை, இது தொடர்பான சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. முன்னதாக ஜனவரி 1 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சுழற்சி முறையில் பிரான்ஸ் தலைமையேற்றுக்கொண்டது. அதன்போதும் Arc de Triomphe இல் ஐரோப்பிய கொடி பறக்கவிடப்பட்டது. அப்போது இச்செயலுக்கு பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

பிரான்சின் இறையான்மையை குறைத்து மதிப்பிடப்படுவதாகவும், பிரெஞ்சு கொடியை நீக்கி, ஐரோப்பிய கொடியை பறக்கவிடவேண்டிய அவசியம் இல்லை எனவும் விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே மீண்டும் இங்கு ஐரோப்பிய கொடி பறக்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.