இன்று அதிகாலை இடம்பெற்ற பாரிய தீவிபத்தில் ஒன்றில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
Saint-Laurent-de-la-Salanque (Pyrénées-Orientales) நகரில் இச்சம்பவம் நள்ளிரவு 1.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவியது. தீ மிக வேகமாக கட்டிடத்தின் ஏனைய தளங்களுக்கும் பரவியது.
சம்பவ இடத்துக்கு 85 வரையான தீயணைப்பு படையினர் குவிக்கப்பட்டு, பெரும் போராட்டத்தின் முடிவில் தீ அணைக்கப்பட்டது.
இத்தீவிபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இச்செய்தி அப்பகுதி முழுவதும் ஆழ்ந்த துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்துறை அமைச்சர் சம்பவ இடத்துக்கு விரைந்து செல்ல உள்ளார்.
கட்டிடத்தின் கீழ் தளத்தில் ஒரு சிற்றுண்டிச் சாலை இருந்ததாகவும், அதில் இருந்த எரிவாயு குடுவை வெடித்ததால் இத்தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 90 பேர் அங்கிருந்து வெளியேற்றப்படுள்ளனர். அவர்கள் அருகில் உள்ள உடற்பயிற்சி கூடம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.