பிரான்ஸ் மற்றும் ஜரோப்பிய நாடுகளில் இருந்து வரும் வைன், ஷம்பெயின் மற்றும் மதுபான வகைகள் மீது 200 சதவீத சுங்க வரி விதிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் பிரான்ஸின் வைன் மற்றும் மதுபானத் தயாரிப்புத் துறையினர் மத்தியில் பெரும் பதற்ற நிலை தோன்றியுள்ளது .



அமெரிக்காவின் பிரபல பேர்பொன்(bourbon) விஸ்கி உட்பட மதுபான வகைகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் 50 வீத சுங்க வரியை விதிக்கவுள்ளது. அதற்குப் பதிலடியாகவே ட்ரம்ப் இந்த அச்சுறுத்தலை விடுத்திருக்கிறார்.

அமெரிக்காவுக்குள் இறக்குமதியாகின்ற வெளிநாட்டுப் பொருள்களுக்கு அதிபர் ட்ரம்ப் அடுத்தடுத்து அதிரடியாக விதித்துவருகின்ற வரிகள் சர்வதேச வர்த்தகப் போர் ஒன்றை ஏற்படுத்தியுள்ளன.

வெளிநாட்டுப் பொருள்களை அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்கின்ற நிறுவனங்களே அரசுக்கு இந்த வரியைச் செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

கனடா, மெக்ஸிக்கோவைத் தொடர்ந்து சீனா, ஜரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து வருகின்ற பொருள்கள் மீதும் இறக்குமதி வரிகளை விதித்து

ட்ரம்ப் பதவியேற்ற கையோடு அமெரிக்காவினுள் வருகின்ற இரும்பு, அலுமினியம் என்பவற்றுக்கு 25 வீத வரியை அறிவித்தார்.

அதற்குப் பதிலடியாக ஏனைய நாடுகளும் அமெரிக்கப் பொருள்களுக்கு வரிகளை விதிக்கத் தொடங்கியுள்ளன.

அமெரிக்கத் தயாரிப்பான படகுகள், மோட்டார் சைக்கிள்கள், மற்றும் விஸ்கி (bourbon), நீளக்காற்சட்டைகள், சேர்ட் ஆகியன மீது ஐரோப்பிய ஒன்றியம் ஏப்ரல் 1 முதல் 50 வீத சுங்க வரிகளை அறவிடவுள்ளது.

இந்த முடிவை ஜரோப்பிய ஒன்றியம் கைவிடாவிட்டால் ஒன்றிய நாடுகளது மதுபானங்கள் மீது 200 வீத வரிவிதிப்பை அமுல் செய்வேன் என்று ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவொன்றில் எச்சரித்துள்ளார்.

அதிபர் ட்ரம்பின் அமெரிக்காவுக்கான புதிய பொருளாதாரக் கொள்கையில் ஒரு மையத் திட்டமாக இறக்குமதி வரி விதிப்புக் காணப்படுகிறது. வெளிநாட்டுப் பொருள்கள் மீது அதிக வரிகளை விதிப்பது உள்நாட்டில் உற்பத்தித் தொழில் துறைகளை ஊக்குவிக்கும் அதேசமயம் புதிய தொழில் வாய்ப்புகளையும் அதிகரிக்கும் என்று அவர் நம்புகிறார்.