அதிபர் மக்ரோன் பிரான்ஸில் ஆயுத தளபாடங்களைத் தயாரிக்கின்ற மிகப்பெரிய நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகளை எலிஸே மாளிகைக்கு அழைத்துப் பேச்சு நடத்தியிருக்கிறார்.

ஷெல்கள், பீரங்கிக் குண்டுகள், கவச வாகனங்கள், ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்கள் போன்றவற்றைத் தயாரிப்பதைத் துரிதப்படுத்துமாறு அவர்களுக்குப் பணிப்புரை விடுத்திருக்கிறார். ஆனால் எவ்வளவு தொகையான அல்லது எண்ணிக்கையான ஆயுதங்கள் என்ற விவரத்தை அவர் குறிப்பிடவில்லை.

கடந்த வெள்ளியன்று இந்தச் சந்திப்பு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

நாட்டில் மிகமுக்கியமான பாதுகாப்புத்துறை உற்பத்தி நிறுவனங்கள் அமைந்துள்ள

நுவெல் அக்கிரைன் (Nouvelle-Aquitaine) பிராந்தியத்தில் இருந்தும் ஏனைய பெரு நிறுவனங்களில் இருந்தும் உயர் பிரமுகர்கள் அந்தச் சந்திப்பில் கலத்துகொண்டனர். Dassault, Thales, Safran(Mérignac) ஆகிய போராயுத, விமானத் தயாரிப்பு நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகளும் அவர்களில் அடங்கியிருந்தனர்.

அதிபர் மக்ரோன், சர்வதேச சூழலில் அதிகரித்துவருகின்ற நிச்சயமற்ற நிலை என்று அவரே கூறுகின்ற பூகோள அரசியல் நிலைமையில் பிரான்ஸினதும் ஐரோப்பாவினதும் இடத்தைப் பலப்படுத்திக்கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். உக்ரைனுக்கான ஆயுதவிநியோகங்கள் தொடர்ந்து தொய்வின்றிக் கிடைப்பதை உறுதிப்படுத்த விரும்புகிறார். அதற்காகப்

பாதுகாப்புத் துறையில் அதிக முதலீடுகளைச் செய்யத் திட்டமிட்டுள்ளார்.

ரஷ்யாவின் அச்சுறுத்தல், அமெரிக்காவின் பின்வாங்கல் இவற்றை எதிர்கொண்டுள்ள ஐரோப்பா தனது பாதுகாப்புக்கு முழுமையாகத் தனது சொந்தக் காலிலேயே தங்கி நிற்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் சொந்தமாக ஆயுத தளபாடங்களைத் தயாரித்து மிக விரைவிலேயே பாதுகாப்பில் தன்னிறைவு காணவேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

ஐரோப்பவில் ஆயுத உற்பத்தி மற்றும் போர் விமானத் தயாரிப்பில் பிரான்ஸ் முதலிடத்தில் உள்ளது. ஆனால் பெரும் போர் ஒன்றை எதிர்கொள்ளக் கூடிய நிலைவரத்துடன் ஒப்பிட்டால் அதன் உற்பத்தி வேகம் போதுமானதாக இல்லை என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

முதற்கட்டமாகப் போரை முப்பது நாட்களுக்கு நிறுத்துகின்ற அமெரிக்காவின் சமாதானத் திட்டத்தை உக்ரைன் தரப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. அதற்கு ரஷ்யாவையும் இணங்கச் செய்வதற்கான அழுத்தம் கொடுக்கப்பட்டுவருகிறது.

சமாதான முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்றுவந்தாலும் ஐரோப்பாவுக்கு ரஷ்யாவின் அச்சுறுத்தல் என்பது இன்னமும்

மிகப்பெரிய அளவிலேயே இருந்து வருகிறது எனத் தலைவர்கள் மதிப்பிடுகின்றனர். அதனால் ஐரோப்பிய நாடுகள் தத்தமது பாதுகாப்புச் செலவீனங்களை அதிகரிப்பதற்கும் ஆயுத உற்பத்தியை விரைவுபடுத்தவும் தமக்குள் இணக்கம் கண்டுள்ளன.

அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஐரோப்பாவைப் பாதுகாக்கின்ற பொறுப்பிலிருந்து விலகும் அமெரிக்காவின் முடிவை அறிவித்ததைத் தொடர்ந்து

பிரான்ஸின் பாதுகாப்புத் துறைப் பங்குச் சந்தைக் குறியீடு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. உள்நாட்டு ஆயுத உற்பத்தித் துறைகளில் முதலீடுகள் அதிகரிக்கின்றன. அவற்றில் பெரும் தொழிலாளர் படைக்கான வெற்றிடங்களும் ஏற்பட்டுள்ளன.

ஷெல் குண்டுகள் போன்ற ஆயுதத் தயாரிப்பு வேலைகள் ஏற்கனவே வேகமெடுக்கத் தொடங்கிவிட்டன. ஆயுதத் தொழில் நிறுவனங்களது ஆயத்த நிலைமை எவ்வாறு மாறியிருக்கின்றது என்பது பற்றிய செய்திகளை நாட்டின் ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.