உலகம் மிகப் பெரிய சவால்களை எதிர்கொண்டிருக்கின்ற இந்த நிச்சயமற்ற தருணத்தில் தொடர்ந்தும் பார்வையாளராக இருந்துகொண்டிருப்பதென்பது பைத்தியக்காரத்தனம். ரஷ்யா எங்கள் வரம்புகளைச் சோதித்து வருகிறது. பிரான்ஸுக்கும் ஐரோப்பாவுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.



அமெரிக்கா இனி எங்கள் பக்கம் நிற்கவில்லை என்றால் அந்த நிலைமையை எதிர்கொள்வதற்கு

நாங்கள் தயாராக வேண்டும்.

-இவ்வாறு ஐரோப்பிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன்.

ஐரோப்பிய நாடுகள் தத்தமது பாதுகாப்புக்கான செலவுகளை அதிகரிக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், சகல நாடுகளினதும் படைகளுக்குப் பொறுப்பான தளபதிகளை(chiefs of staff) அடுத்த வாரம் பாரிஸில் முக்கிய கூட்டம் ஒன்றுக்கு அழைத்திருக்கிறார்.

அதிபர் மக்ரோன் பூகோள அரசியலில் ஏற்பட்டிருக்கின்ற திடீர் மாற்றங்கள் தொடர்பாக இன்றிரவு தொலைக்காட்சி வழியாக நாட்டுமக்களுக்கு விசேட உரையாற்றியுள்ளார்.

அந்த உரையிலேயே அவர் மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உக்ரைனுக்கான இராணுவ மற்றும் நிதி உதவிகளை இடை நிறுத்துவதாக அறிவித்திருக்கிறார். உளவுத் தகவல்களை உக்ரைனுடன் பகிர்ந்துகொள்வதும் நிறுத்தப்படுவதாக சிஐஏ தெரிவித்துள்ளது. ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவுகள் போர்க் களத்தில் உக்ரைனை மிகவும் பலவீனமான நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

உக்ரைனின் பாதுகாப்புக்கான பொறுப்பில் இருந்து அமெரிக்கா திடீரென விலகுவதால் ஏற்பட்டிருக்கின்ற வெற்றிடத்தை எவ்வாறு இட்டு நிரப்புவது என்ற மாபெரும் சவால் ஐரோப்பிய நாடுகள் முன் எழுந்துநிற்கிறது.

அணு ஆயுதத் தாக்குதல் பாதுகாப்புக்கு இதுவரை நாளும் அமெரிக்காவிடம் தங்கியிருந்த ஏனைய ஐரோப்பிய நாடுகளைப்

பாதுகாக்க வேண்டிய கடப்பாடு பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு வல்லரசுகளின் மீது பொறிந்திருக்கிறது.

"நாங்கள் இப்போது ஒரு புதிய சகாப்தத்தில் இருக்கிறோம்" என்று இந்த நிலைவரத்தை மக்ரோன் தனது உரையில் குறிப்பிட்டிருக்கிறார். உக்ரைன் விடயத்தில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றியிருப்பதையும் ஐரோப்பியப் பொருள்களுக்கு சுங்கவரி விதிக்கப் போவதாக அது மிரட்டியிருப்பதையும் மக்ரோன் நினைவுபடுத்தினார்.

மக்ரோன் தனது உரையில் மேலும் கூயதாவது :

அமெரிக்கா எங்கள் பக்கம் நிற்கும் என்பதை நம்ப விரும்புகிறேன். அது எதுவானாலும் நாங்கள் நிச்சயம் ஆயத்தமாக இருக்கவேண்டும்.

அமைதிக்கான உறுதியான மற்றும் நீடித்த திட்டம் ஒன்றை உருவாக்குவதில் பிரான்ஸ் உக்ரைனுடனும் ஏனைய ஐரோப்பிய நாடுகளுடனும் ஓரணியில் நிற்கிறது. ஆனால் அமைதிக்கான வழி என்பது உக்ரைனைக் கைவிடுவதாக இருக்க முடியாது. சமாதான உடன்பாடு ஒன்று எட்டப்பட்டால் உக்ரைனைப் பாதுகாப்பதற்காக ஐரோப்பிய அமைதிகாக்கும் படைகள் அங்கு நிலைகொள்ளும். இவற்றை உத்தரவாதப்படுத்தும் உடன்பாடு அவசியம்.

(உரையின் எஞ்சிய பகுதி பின்னர் வெளியாகும்)