ஐரோப்பிய ஆணையகம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளது குடிமக்களை நெருக்கடிகால ஆயத்த நிலைமைக்குத் தயார்ப்படுத்துகின்ற வழிமுறையை முன்மொழிந்துள்ளது.
போர், இயற்கை அனர்த்தம், சைபர் தாக்குதல், அணுக்கசிவு, தொற்று நோய்கள் உட்பட "நெருக்கடிகளை, எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை, மற்றும் அதனை நிர்வகிப்பதற்கான முகாமைத்துவ உத்தி" (crisis preparedness and management strategy) என்கின்ற அந்த முன்மொழிவு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒவ்வொரு குடிமகனும் குறைந்தது 72 மணிநேரத்துக்கு உயிர்வாழ்வதற்கான அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய ஒரு பொதியைத் தயார்ப்படுத்திக் கொள்வதை உள்ளடக்குகின்றது.
"புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் மோதல்கள், சைபர் பாதுகாப்பு மற்றும் தகவல் கையாளுதலில் உள்ள அபாயங்கள், காலநிலை மாற்றம் மற்றும் இயற்கைப் பேரழிவுகளால் அதிகரித்துவருகின்ற ஆபத்துகளுக்கு மத்தியில்- சாத்தியமான எந்தவொரு நெருக்கடிக்கும் முகம்கொடுக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தயாராக இருக்க வேண்டும்" என்று ஆணையம் விரும்புகிறது. "உறுப்பு நாடுகளுக்கு எதிராக ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பு சாத்தியம்" என்பதையும் அது தனது முன்மொழிவில் நேரடியாகக் குறிப்பிட்டுள்ளது.
குடிமக்கள் குறைந்தது 72 மணிநேரத்துக்கு தங்களது உயிரைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளும் விதத்திலான " உயிர்வாழ்வதற்கான கருவியைத்" (72-hour individual survival kit) தயார் செய்துகொள்வதற்கு உறுப்பு நாடுகளுக்கு நாங்கள் ஆதரவு வழங்குவோம் - என்று இந்த விவகாரத்துக்குப் பொறுப்பான ஐரோப்பிய ஆணையர் ஹட்ஜா லஹ்பீப் (Hadja Lahbib) செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்தார்.
திடீர் அனர்த்த நிலைமையில் உயிர்வாழ உதவும் இந்தக் கருவியில் பொதி செய்து வைத்திருக்க வேண்டிய அவசிய பொருள்கள் என்று சிலவற்றை அவர் தனது வீடியோப் பதிவு ஒன்றில் வெளியிட்டிருக்கிறார்.
தண்ணீர், உணவு, அவசிய மருந்துகள், மூக்குக் கண்ணாடி, முக்கிய ஆவணங்கள் அடங்கிய நீர்புகாத பை(waterproof pouch) ,டோர்ச் லைற், பற்றரி, கைத்தொலைபேசி சார்ஜர், திரவப் பணம், கத்தி, ரேடியோ, தீப்பெட்டி, மெழுகுவர்த்தி போன்ற பல பொருள்கள் அதில் இடம்பெறுகின்றன.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்திலும் இதற்கான விழிப்புணர்வைத் தூண்டும் "தேசிய ஆயத்த நிலை தினம்" ஒன்றை அறிவிப்பது தொடர்பாக வும் ஆலோசிக்கப்பட்டுவருகிறது.
தேசிய நெருக்கடிகள், அனர்த்தங்களின் போது பீதியடையாமல் - பதற்றப்படாமல் எதனைச் செய்யவேண்டும் என்று மக்களுக்கு வழிகாட்டும் விழிப்புணர்வைத் தூண்டுவது இதன் நோக்கமாகும் - என்று தெரிவித்த ஆணையர் ஹட்ஜா லஹ்பீப், கொரோனா பெருந்
தொற்று நோய் நெருக்கடியின் பொது மக்கள் கழிப்பறைக் காகிதங்களை வாங்குவதற்காகப் பதற்றத்துடன் முண்டியடித்ததை நினைவுபடுத்தியுள்ளார்.
உக்ரைன் போரைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை அடுத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தங்களது பாதுகாப்பைப் பலப்படுத்தத் தொடங்கியுள்ளன. நெருக்கடி காலங்களுக்கு மக்களைத் தயார்ப்படுத்தும் இது போன்ற திட்டங்களைச் சில நாடுகள் ஏற்கனவே ஆரம்பித்தும்விட்டன.