பிரான்ஸின் அல்ஸ்ப் பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த குழந்தை எமிலின் மர்ம மரண விசாரணைகளில் திடீர்த் திருப்பம் ஏற்பட்டுள்ளது. காணாமற்போயிருந்த அந்த இரண்டரை வயது ஆண் குழந்தையின் மரணம் தொடர்பாக முதல் முறையாக நால்வர் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.



குழந்தையின் தாய்வழிப் பேரன், பேர்த்தி மற்றும் அவர்களது வளர்ந்த பிள்ளைகள் இருவர் ஆகிய நால்வருமே வெவ்வேறு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர் என்று அறிவிக்கப்படுகிறது.

"வேண்டுமென்றே கொலை செய்தமை" , "சடலத்தை மறைத்தமை" ஆகிய குற்றச் செயல்களின் அடிப்படையில் அவர்களிடம் விசாரணை நடப்பதாகத் தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.

கைதான பேரனாரது வீட்டில் அதிகாரிகள் இன்று சோதனை நடத்தியுள்ளனர். அங்கிருந்து அவரது காரையும் வான் ஒன்றையும் மீட்ட பொலீஸார் தடயப் பரிசோதனைகளுக்காக அவற்றை எடுத்துச் சென்றிருக்கின்றனர். வாகனங்களில் இரத்தத் தடயங்கள் மற்றும் மரபணுக்களைக் கண்டறியப் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளன என்று பொலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2023 ஜூலை மாதம் பிரான்ஸின் அல்ப்ஸ் மலைப் பிராந்தியத்தில் Le Vernet என்ற சிறிய கிராமத்தில் எமில் தனது பேரன் பேர்த்தியாரது பாதுகாப்பில் அவர்களது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சமயத்தில் மர்மமான விதத்தில் காணாமற்போயிருந்தான்.

அவனைக் கண்டுபிடிப்பதற்காகப் பெரும் தேடுதல் பணிகள் பல மாதங்களாக நீடித்த போதிலும் குழந்தைக்கு என்ன நடந்தது என்பது தெரியவரவில்லை. தேடுதல் பணி தொடர்பான விரிவான செய்திகளை "தாஸ்நியூஸ்" முன்னர் வெளியிட்டிருந்தமை வாசகர்கள் அறிந்ததே.

குழந்தை காணாமற்போனது எப்படி என்பது நீண்ட காலமாகப் பெரும் மர்மமாகவே இருந்து வந்தது.

மனித தலையீடா, அல்லது தனியே வழிமாறிச் சென்று தொலைதல், அல்லது காட்டு விலங்குகளால் இழுத்துச் செல்லப்படல் இவ்வாறான பல சாத்தியங்களை முன்வைத்து விசாரணையாளர்கள் தங்களது புலன் விசாரணைகளை முன்னெடுத்துவந்தனர்.

பின்னர் கடந்த 2024 மார்ச் மாதம்

அல்ஸ்ப் மலைப் பகுதி ஒன்றில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் வழியில் தற்சயலாகக் கண்டு பிடித்த சிறிய மண்டை ஓடு ஒன்று குழந்தை எமிலினுடையது என்பது உறுதிசெய்யப்பட்டது. அந்தப்பகுதியில் நடந்த தேடுதலில் மேலும் சில எலும்பு எச்சங்களும் தடயப் பொருள்களும் பின்னர் மீட்கப்பட்டிருந்தன. அதனையடுத்து எமிலின் மரணம் உறுதிசெய்யப்பட்டது. அண்மையில் அவனது உடல் எச்சங்கள் குடும்பத்தவர்களால் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையிலேயே இன்றைய கைதுகள் இடம்பெற்றிருக்கின்றன. அதேசமயம் புதிய துப்புக்கள் எதுவும் இன்றி விசாரணைகள் மந்த நிலையை அடைந்திருந்த ஒரு கட்டத்தில் கடந்த வாரம் புதிய தகவல் ஒன்றை அதிகாரிகள் வெளியிட்டிருந்தனர். கிராமத்தின் தேவாலயப் பகுதியில் மரத்தினாலான பூந்தொட்டி ஒன்றினைச் சோதனையிட்ட பொலீஸார் அதனைக் கைப்பற்றித் தம்மோடு எடுத்துச் சென்றனர். ரோஜாக்களை வளர்க்கின்ற அந்தத் தொட்டியில் காணப்பட்ட மண்ணில் மரபணுத் தடயப் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளன என்பதே அந்தத் தகவல் ஆகும். ஆனால் பூந்தொட்டி கைப்பற்றப்பட்டமைக்கும் இன்று இடம்பெற்ற கைதுகளுக்கும் தொடர்பில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குழந்தை எமிலியின் பெற்றோரும் பேரன் பேர்த்தியரும் தீவிர கத்தோலிக்க மதப் பின்னணி கொண்டவர்கள். குழந்தை எமிலி விவகாரம் சுமார் 25 குடும்பங்கள் மாத்திரமே வசிக்கின்ற Haut-Vernet என்ற அந்தச் சின்னஞ்சிறிய அல்ஸ்ப் கிராமத்தை மீண்டும் ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இடம்பெறவைத்துள்ளது.

சுமார் இருபது மாதங்கள் நீடித்த மர்மம் இன்றைய கைதுகளுடன் அவிழுமா? எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் Vernet கிராமமக்கள்.