காணாமற்போன குழந்தை எமிலி கடைசியாக அணிந்திருந்தவை எனச் சந்தேகிக்கப்படுகின்ற ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன என்று அரச சட்டவாளர் அறிவித்திருக்கிறார். அதேசமயம் ஏற்கனவே கண்பிடிக்கப்பட்ட அவனது மண்டை ஓட்டில் கடி காய அடையாளங்கள் - பெரும்பாலும் விலங்கு கடித்ததை ஒத்த அடையாளங்கள்-காணப்படுகின்றன
என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். 

பிரான்ஸின் தென் கிழக்கே அல்ப்ஸ் மலைக் கிராமத்தில் (Haut-Vernet - Alpes-de-Haute-Provence)சுமார் ஒன்பது மாத காலமாகக் காணாமற்போயிருந்த இரண்டரை வயது ஆண் குழந்தை எமிலியின் மண்டை ஓடு, பல்லு என்பன வழிப்போக்கர் ஒருவரால் கடந்த சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டமை வாசகர்கள் அறிந்ததே. அதனை அடுத்து மரங்களும் புதர்களும் அடர்ந்த அந்தப் பிரதேசத்தில் புதிதாகப் பெருமெடுப்பிலான தேடுதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் போதே குழந்தையின் ரீ-சேர்ட், காலுறை, உள்ளாடை ஆகியன-மண்டை ஓடு மீட்கப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 150 மீற்றர்கள் தொலைவில் - கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று அரச சட்டவாளர் இன்று செவ்வாய்க்கிழமை மாலை நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அறிவித்திருக்கிறார். 

புதிதாக  உடல் எச்சங்கள் எதுவும் அப்பகுதியில் கண்டுபிடிக்கப்படவில்லை. மண்டை ஓடும் பல்லும் மாத்திரம் குழந்தையின் 
மரணத்துக்கு என்ன காரணம் என்பதைத் தீர்மானிப்பதற்குப் போதுமானவையாக இல்லை - என்றும் அவர் கூறியிருக்கிறார். 

ஆடைகள் மேலதிக ஆய்வுகளுக்கும் பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்படவுள்ளன. அதேசமயம் 
தலையில் காணப்படுகின்ற கடி காயங்கள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட விலங்குகளால் ஏற்பட்டவையாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். 

மண்டை ஒடு மீது நடத்தப்பட்ட பரிசோதனை, அதன் மீது காணப்படும் படிவுகள் என்பன குழந்தையின் சடலம் தரையில் புதைக்கப்படவில்லை என்ற 
பூர்வாங்க முடிவுக்கு வருவதற்கான ஆதாரங்களைக் கொண்டுள்ளன என்றும் சட்டவாளர் தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே தேடுதல்கள் நடைபெற்ற சமயம் எமிலியின் உடல் அங்கே மறைந்து கிடந்ததா என்பதை இப்போது எங்களால் கூற முடியாது என்று அரச சட்டவாளர் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் தெரிவித்தார். 

குழந்தை காணாமற்போன கடந்த கோடைப் பகுதியில் அந்தப் பிரதேசம் எங்கும் தாவரங்களும் புதர்களும் 
மேலும் அடர்த்தியாகக் காணப்பட்டன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். 

கடந்த ஒன்பது மாத காலத் தேடுதல்களின் போது பல தடவைகள் மோப்ப நாய்கள் உட்பட விசேட படையினரால் தீவிரமாகச் சோதிக்கப்பட்ட பகுதியிலேயே குழந்தையின் எச்சங்களும், ஆடைகளும் மீட்கப்பட்டிருப்பது இதுவரையான தேடுதல் தொழில் நுட்பங்களது வினைத் திறன் மீது பல்வேறு கேள்விக் கணைகளைத் தொடுத்திருக்கின்றன. 

தேடுதலுக்குப் பொறுப்பான ஜொந்தாம் படையினரது நிபுணர்களையும் அதிகாரிகளையும் செய்தியாளர்கள் கேள்வி கேட்டுக் குடைந்தெடுக்கின்ற விவாத நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சிகளில் காணமுடிகிறது.