தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் பிரதமர் Élisabeth Borne ஆகியோருக்கு இடையில் ‘ஓய்வூதிய சீர்திருத்தம்’ தொடர்பாக சந்திப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பை பிரதமர் மாளிகை தொழிற்சங்கங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது. வரும் மே 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் இந்த சந்திப்பு பிரதமர் மாளிகையில் இடம்பெற உள்ளது.
‘இருதரப்பு’ நியாயங்களையும் ஆலோசிக்கக்கூடிய சந்திப்பாக இது அமையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
**
முன்னதாக கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி inter-union தொழிற்சங்க தலைவர்களுக்கும் பிரதமருக்கும் இடையே இடம்பெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்திருந்தது. ஓய்வூதிய சீர்திருத்தத்தில் மாற்றங்கள் செய்வதற்கு பதிலாக சீர்திருத்தத்தினையே கைவிடவேண்டும் என அத்தொழிற்சங்கம் நிபந்தனை வைத்ததை அடுத்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
அதையடுத்து இந்த புதிய சந்திப்பில் inter-union தொழிற்சங்கம் கலந்துகொள்ளுமா இல்லையா என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியிடப்படவில்லை.
***
அதேவேளை, வரும் ஜூன் 6 ஆம் திகதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.