பிரான்ஸின் தென் கிழக்கே கிரெனோபிள் (Grenoble) நகரில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்ட பத்து வயதுச் சிறுமி ஈயா (Eya) 24 மணி நேரங்களின் பின்னர் டென்மார்க்கில்

மீட்கப்பட்டிருக்கிறாள். சிறுமியைக் கடத்திச் சென்றவர்கள் எனக் கூறப்படும் அவளது தந்தையையும் மற்றொரு நபரையும் டென்மார்க் பொலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.





வியாழக் கிழமை காலை தனது தாயாருடன் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த வேளை அவர்களை வழி மறித்த தந்தையும் தலையை மூடி மறைத்த மற்றொரு நபரும் தாயாரின் முகத்தில் கண்ணீர் புகையை வீசிவிட்டுச் சிறுமியை இழுத்துக் காரில் ஏற்றிக் கொண்டு தப்பிச் சென்றனர் என்று கூறப்படுகிறது. தாயாரதும் சிறுமியினதும் அலறல் கேட்டு அந்த இடத்துக்குச் சென்ற சிலர் சம்பவம் பற்றிப் பொலீஸாருக்கு அறிவித்தனர்.

அதனையடுத்துச் சிறுமி ஈயா கடத்தப்பட்ட செய்தி நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டது.

அந்த எச்சரிக்கைச் செய்தியில் சிறுமி மற்றும் அவளைக் கடத்தியோரது ஆள் அடையாள விவரங்கள் வெளியிடப்பட்டன. ருனீசியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட சிறுமியின் தந்தை சுவீடன் மற்றும் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றவர் என்பது தெரிய வந்ததால் சிறுமி வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் அவரைக் கைது செய்வதற்கான பிடியாணை ஐரோப்பிய நாடுகள் மட்டத்திலும் விடுக்கப்பட்டது.



தனது முன்னாள் கணவர் குடும்ப வன்முறைகளில் ஈடுபடுபவர் என்றும்

அவரால் தனது மகள் துன்புறுத்தப் படலாம் என்றும் சிறுமியின் தாயார் முறையிட்டிருந்தார்.
கிரெனோபிள் (Grenoble) நகர அரச சட்டவாளரது உத்தரவில் நாடெங்கும்

சிறுமியைத் தேடும் பணி இடம்பெற்று வந்த நிலையில், அவள் சுவிஸ், ஜேர்மனி ஊடாக டென்மார்க்கிற்குக் கடத்திச் செல்லப்பட்டாள் என்ற தகவல் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அங்குள்ள

Rødbyhavn என்ற சிறு நகரில் காரை எல்லைச் சோதனைக்காக வழிமறித்த டெனிஷ் பொலீஸார் அதில் கடத்திச் செல்லப்பட்ட சிறுமியைக் கண்டுபிடித்ததுடன் அவளது தந்தையையும், மற்றைய நபரையும் கைது செய்தனர். அவர்கள் விரைவில் பிரெஞ்சு பொலீஸாரிடம் கையளிக்கப்படவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.



சிறுமியைக் கண்டுபிடிப்பதற்கு ஐரோப்பிய நாடுகள் வழங்கிய வேகமான ஒத்துழைப்புக்கு கிரெனோபிள் அரச சட்டவாளர் நன்றி தெரிவித்திருக்கிறார்.