இளைஞன் ஒருவன் கடத்தப்பட்டு நிர்வாணமாக வீதியில் இறக்கிவிடப்பட்டுள்ளான். மேற்படி சம்பவத்தில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இச்சம்பவம் திங்கட்கிழமை மாலை Chelles (Seine-et-Marne) நகரில் இடம்பெற்றுள்ளது. அன்று மாலை 23 வயதுடைய இளைஞன் ஒருவன் வீதியில் நிர்வாணமாக விழுந்து கிடப்பதை பார்த்த காவல்துறையினர், அவனை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 20 நிமிடங்களுக்கு முன்னதாக குறித்த இளைஞன் Vaires-sur-Marne நிலையத்துக்கு அருகே வைத்து கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐவர் கொண்ட குழு ஒன்று குறித்த இளைஞனை கட்டாயப்படுத்தி மகிழுந்துக்குள் ஏற்றி, அவனிடம் இருந்த €170 யூரோக்கள் பணம், தொலைபேசி உள்ளிட்ட உடமைகளை கொள்ளையிட்டுள்ளனர்.

பின்னர் இளைஞனைத் தாக்கி, அவனது உடைகளை களைந்துவிட்டு, அவனை வீதியில் இறக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், முதற்கட்டமாக இருவரை கைது செய்துள்ளனர்.