கடைகளில் பொருள்களை வாங்குவோருக்கு அதற்கான பற்றுச்சீட்டைக் காகித வடிவில் உடனேயே அச்சிட்டு வழங்கும் தானியங்கி நடைமுறை(l’impression automatique des tickets de caisse) முடிவுக்கு வருகிறது.
வர்த்தகர்கள் இனிமேல் தங்களது
வாடிக்கையாளர்களிடம் "உங்களுக்கு அச்சிட்ட பற்றுச் சீட்டு வேண்டுமா" என்று கேட்டபின்னரே அதனை அச்சிட்டு வழங்கவேண்டும். அல்லது
ஈமெயில் மூலமோ அல்லது குறுஞ்செய்தி போன்ற வேறு டிஜிட்டல் முறைகளிலோ அதை அவர்களுக்கு அனுப்ப வேண்டும்.
வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் போது அதை உறுதி செய்யும் பற்றுச் சீட்டுக்களுக்கும்
(les tickets de carte bancaire) இந்தப் புதிய நடைமுறை பொருந்தும்.
கடைகளில் காசாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நன்கு புரியும் படியாக இதனைக் கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பரீட்சார்த்த அளவில் நடைமுறைக்கு வந்த இந்தப் புதிய ஏற்பாடு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்படுகிறது.
வீட்டுப் பாவனைப் பொருள்கள், கணனி உபகரணங்கள் போன்ற "நீடித்த பாவனைப் பொருள்கள்" என்ற வகைக்குள் அடங்கும் சில பொருள்களைக் கொள்வனவு செய்யும் போது விதிவிலக்காக அச்சிட்ட பற்றுச் சீட்டுகள் வழங்கப்படலாம். பொது நிர்வாக சேவைப் பிரிவின் சுற்றறிக்கையில் இது தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதிகரித்துவரும் காகிதப் பாவனையைப் படிப்படியாகக் குறைத்து முடிவுக்குக் கொண்டுவருகின்ற கழிவுக் குறைப்பு மற்றும் சூழலைப் பாதுகாக்கின்ற திட்டங்களின் அடிப்படையிலேயே
பற்றுச்சீட்டு அச்சிடும் பாரம்பரியமும்
நிறுத்தப்படவுள்ளது.
பிரான்ஸில் வர்த்தக நடவடிக்கைகளில்
இந்தச் சிறிய பற்றுச் சீட்டுக்கள் ஆண்டு தோறும் சுமார் முப்பது பில்லியன்கள் என்ற எண்ணிக்கையில் அச்சிடப்பட்டு
வழங்கப்படுகின்றன. சேகரித்து மறு சுழற்சிக்கு உட்படுத்தக் கடினமான இந்தச் சிறு துண்டுக் காகிதங்கள் உடனேயே குப்பைக் கூடைகளுக்குள்
மட்டுமன்றிக் கண்ட கண்ட இடங்களிலும் வீசப்படுகின்றன. அத்துடன் காகிதங்களில் உள்ள ரசாயனப் பொருள்கள் சுகாதாரப் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன - என்று வர்த்தகத் துறை அமைச்சு தெரிவிக்கிறது.
புதிய நடைமுறை தங்களுக்குப் பல
சிரமங்களை ஏற்படுத்தலாம் என்று
நுகர்வோர் தரப்பில் கூறப்படுகிறது. தாங்கள் வாங்கும் பொருள்களது விலை விவரங்களை உடனேயே சரிபார்த்துக் கொள்வதற்குப் பற்றுச்
சீட்டுகள் அவசியம் என்று பலரும்
இந்த நடைமுறையை எதிர்க்கின்றனர்.
பொருள்களுக்கான பற்றுச் சீட்டை
கைத்தொலைபேசிகளுக்கோ அல்லது ஈ-மெயிலுக்கோ அனுப்புவது தங்களுக்குத் தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்றும்
தொலைபேசி இலக்கத்தை அல்லது ஈமெயில் விவரத்தை வர்த்தகர்களுக்கு வழங்குவது அவர்கள் அதன் மூலம் தங்கள் விளம்பரப்படுத்தல்களைச் செய்வதற்கு வாய்ப்பளிக்கும் என்றும்
அதேசமயம் தங்களது தனிப்பட்ட தரவுகள் திருடப்படுவதற்கும் அது
வழியேற்படுத்தலாம் என்றும் பாவனையாளர்கள் தரப்பில் ஐயங்கள் தெரிவிக்கப்படுகின்றன.