நாடெங்கும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் வன்முறைச் சம்பவங்களும் தீவிரமடைந்து வருகின்றன. பாரிஸ் நகரில் இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணிகளில் ஈடுபட்டோரில் ஒரு பகுதியினர் எதிர்பாராத விதமாக நகரின் முதலாவது நிர்வாகப் பிரிவில் சத்லே-லே-ஹால்ஸ் (Châtelet-Les Halles) இல் அமைந்துள்ள மிகப் பெரியதும்
புகழ் வாய்ந்ததுமான "ஃபோறம் தே ஹால்ஸ்" (forum des Halles ) வணிக வளாகத்தினுள்ளே அதிரடியாக
நுழைந்தனர். அதனால் அங்கு பெரும் களேபரம் ஏற்பட்டது.
நகருக்கு வெளியே செல்லும் ரயில் மார்க்கங்களின் முக்கிய சந்திக்கு
அருகே வழக்கமாகப் பெரும் எடுப்பில் உல்லாசப் பயணிகள் திரள்கின்ற
அந்தப் பல அடுக்கு வணிக வளாகத்தின் உள்ளே புகைக் குண்டுகள் வீசப்பட்டன. அங்கே
பெரிய அளவிலான அரச எதிர்ப்பு சுலோகப் பதாகைகள் கட்டப்பட்டன.
கோஷங்களை எழுப்பியவாறு நுழைந்த நூற்றுக்கணக்கானோர்
வணிக வளாகத்துடன் இணைந்த ஒரு பகுதியில் அமைந்துள்ள RER A ரயில் மேடை வரை சென்றனர். அதனால்
பயணிகளுக்குப் பெரும் இடையூறு ஏற்பட்டது. எனினும் வன்செயல்கள்
எதுவும் இடம்பெறவில்லை.
சர்ச்சைக்குரிய ஓய்வூதியத் திருத்தச் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடுவதைத் தவிர்த்து நேரடியாக அரசமைப்பின் 49.3 அதிகாரத்தைப் பயன்படுத்தி அதனைச் சட்டமாக்கப்போவதாக அரசு அறிவித்ததமை நாட்டின் தொழிலாளர்
சமூகத்தினரிடையே பெரும் ஆத்திர உணர்வலையைத் தோற்றுவித்துள்ளது. தலைநகர் பாரிஸ் உட்பட நாடெங்கும் முக்கிய நகரங்களில் வீதி மறியல்கள் போன்ற ரயில் மறிப்பு பல வடிவங்களில் எதிர்ப்பு நடவடிக்கைகள் விரிவடைந்து வருகின்றன.
நாடாளுமன்ற வளாகத்துக்கு நேர்ரெதிராக அமைந்துள்ள கொன்கோட் சதுக்கத்தில் கடந்த இரண்டு தினங்களாக அணிதிரண்டு
அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்களைப் பொலீஸார் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியிருந்தனர். மக்கள் அங்கு கூடுவதற்குப் பொலீஸ் தலைமையகம் தடை விதித்திருக்கிறது பொலீஸாரின் அந்த நடவடிக்கைக்குப்
பதிலடியாகவே இன்று சனிக்கிழமை
வணிக வளாகத்துக்குள் நுழைந்து
போராட்டம் நடத்தப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் சமூக வலைத் தளப் பதிவுகளில் தெரிவித்திருக்கின்றனர்.
இதுபோன்ற எதிர்பாராத திடீர் அணி திரள்வுகள் மேலும் பல இடங்களில்
முன்னெடுக்கப்படும் என்று மக்கள் இயக்கங்கள் அறிவித்திருக்கின்றன.
நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகிய லியோனில் (Lyon)
நகரசபைக் கட்டடம் ஒன்று இளைஞர் கும்பல் ஒன்றினால் அடித்து உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது. நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் நடுவே பொலீஸாருடன் மோதல்களில் ஈடுபட்ட
இளைஞர் குழுவினரே குப்பைகளுக்கு தீ வைத்தும் கடைகளைத் தாக்கியும்
சேதம் விளைவித்துள்ளனர்.
வேறுசில இடங்களில் முக்கிய ரயில் நிலையங்களுக்குள் நுழைந்தவர்கள்
ரயில் தண்டவாளங்களில் இறங்கி மறியல் செய்தனர். அதனால் ரயில் போக்குவரத்துகள் தடைப்பட்டன.
அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களது
திடீர் முற்றுகைக்கு இலக்காகக் கூடிய அரச கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் பொலீஸ் பாதுகாப்பை அதிகரிக்குமாறு தலைமையகங் களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.