காதலியை சந்திக்கச் சென்ற இளைஞன் ஒருவன் தாக்கப்பட்டு, ஆடைகள் களையப்பட்டு சென் நதியில் தூக்கி வீசப்பட்டுள்ளான்.
இச்சம்பவம் வியாழக்கிழமை Montmagny (Val-d'Oise) நகரில் இடம்பெற்றுள்ளது. 18 வயதுடைய இளைஞன் ஒருவன் மாலை 5.30 மணி அளவில் தனது காதலியுடன் சந்திப்பு ஒன்றை நிகழ்த்துவதற்காக தனது நண்பனின் மகிழுதில் வந்து இறங்கியுள்ளான். நண்பர் சென்றதும் காதலிக்காக காத்திருந்த இளைஞனுக்கு அதிர்ச்சி மட்டுமே காத்திருந்தது.
சம்பவ இடத்துக்கு மகிழுந்து ஒன்றில் வந்த நான்கு நபர்கள் குறித்த இளைஞனை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர்.
பின்னர் குறித்த இளைஞனை மகிழுந்துக்குள் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து கடத்திச் சென்றனர். 15 நிமிடங்களின் பின்னர் Gennevilliers (Hauts-de-Seine) நகருக்கு வந்தடைந்த குறித்த மகிழுந்து, சென் நதிக்கரையில் நிறுத்தப்பட்டது.
பின்னர் மீண்டும் இளைஞன் தாக்கப்பட்டான். அவது ஆடைகள் களையப்பட்டு சென் நதிக்குள் தூக்கி வீசப்பட்டான். அதன் பின்னர் தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இதுவரை தாக்குதலாளிகள் எவரும் கைது செய்யப்படவில்லை.