பரிஸ் புறநகரான Vélizy-Villacoublay (Yvelines) நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் கொள்ளையிட முற்பட்ட திருடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிரப்பு நிலையம் ஒன்றுடன் உள்ள பல்பொருள் அங்காடியின் கண்ணாடிகளை நேற்று புதன்கிழமை காலை திருடன் ஒருவர் உடைத்துள்ளார். பின்னர் அவர் உள்ளே நுழைய முற்பட்டபோது, உள்ளே பணியாளர் ஒருவர் இருந்துள்ளார். இதனால் தனது கொள்ளை முயற்சியைக் கைவிட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த நிலையத்தில் முன்னதாக கடந்த ஜனவரி 6 ஆம் திகதி இதே நபர் கண்ணாடியினை உடைத்து உள்ளே திருடிச் சென்றிருந்தார். கண்காணிப்பு கமராவில் அக்காட்சிகள் பதிவாகியிருந்தது. அதையடுத்து நேற்று வந்திருந்த திருடனை அடையாளம் கண்டுகொண்ட ஊழியர் உடனடியாக காவல்துறையினரை அழைத்து தகவல் தெரிவித்துள்ளார்.
அதையடுத்து, தப்பி ஓடிய திருடனை காவல்துறையினர் கைது செய்தனர்.