பாரிஸ் நகரில் கடந்த மாதம் 23 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட குர்திஷ் நாட்டவர் மூவரது இறுதி நிகழ்வு பாரிஸின் புறநகரான Villiers-le-Bel இல் இன்று செவ்வாய்க்கிழமை பகல்

நடைபெற்றது. பிரான்ஸின் பல பகுதிகளில் இருந்தும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இருந்தும் வந்த பல்லாயிரக்கணக்கான குர்திஷ் மக்கள் அந்த இறுதி நிகழ்வில் கலந்து கொண்டனர். ஆத்திரமும் உணர்ச்சியும் மேலிட அங்கு திரண்டிருந்தோர் இறந்தவர்களை "மாவீரர்கள்" எனப் பிரகடனம் செய்து

"அவர்கள் புகழ் நிலைத்து வாழும்"

என்று கோஷம் எழுப்பினர்.





உடல்கள் வைக்கப்பட்ட மூன்று சவப் பேழைகளும் குர்திஷ் மக்களது விடுதலைக்காகப் போராடுகின்ற குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி (Kurdistan Workers Party - PKK) மற்றும் சிரியாவில் குர்திஷ்களது கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சிப் பிராந்தியமாகிய ரோஜாவா (Rojava)

ஆகியவற்றின் கொடிகளால் போர்த்தப்

பட்டிருந்தன. அவற்றின் அருகே துருக்கியில் சிறைவைக்கப்பட்டுள்ள

குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியின் தலைவராகிய அப்துல்லா ஓகாலனின் (Abdullah Ocalan) உருவப்படமும் காணப்பட்டது.

குர்திஷ் பெண்கள் அமைப்பின் தலைவி உட்பட மூவர் பாரிஸில் பத்தாவது நிர்வாகப் பிரிவில் வைத்து

வெளிநாட்டவர் மீது வெறுப்புணர்வு கொண்டவர் எனக் கூறப்படும் ஆண் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டமை

தெரிந்ததே. குர்திஷ் மக்கள் அதிகமாக

வசிக்கும் அந்தப் பகுதியில் குர்திஷ்

மக்கள் பண்பாட்டு நிலையம் அருகே

நடத்தப்பட்ட அந்தச் சூட்டுச் சம்பவம்

நகரில் குர்திஷ் வாசிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது.



69 வயதான தாக்குதலாளி வெளிநாட்டவர்களுக்கு எதிராக ஏற்கனவே தாக்குதல்களில் ஈடுபட்டவர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே வெறுப்புணர்வினாலேயே இந்தத் தாக்குதலையும் நடத்தியதாக அவர் ஒப்புக் கொண்டிருந்தார். ஆனால்

பிரான்ஸில் புலம்பெயர்ந்து வாழும் சுமார் ஒன்றரை லட்சம் குர்திஷ் மக்கள்

இந்தத் தாக்குதலை ஒரு பயங்கரவாதச் செயல் என்று கூறிக் கண்டித்ததுடன்

அதற்கான பொறுப்பைத் துருக்கி மீது

சுமத்தியிருந்தனர்.

புலம் பெயர்ந்து பல நாடுகளிலும் வசிக்கின்ற குர்திஷ் இன மக்கள் உலகில் தங்களுக்கு என்று ஒரு நாடில்லாத பெரிய மக்கள் சமூகமாகக் கருதப்படுபவர்கள். சிரியா, துருக்கி, ஈரான், ஈராக் நாடுகளை உள்ளடக்கிய

பெரும் நிலப்பகுதியைத் தங்களது தாயகமாகக் கொண்டவர்கள்.



குர்திஷ் மக்களது விடுதலைக்காகப் போராடுகின்ற குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியை (Kurdistan Workers' Party-PKK) ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் பயங்கரவாத இயக்கமாகப்

பட்டியலிட்டுள்ளன. அந்த இயக்கம் 1984 முதல் துருக்கி அரசுக்கு எதிராகக் கிளர்ச்சிகளில் ஈடுபட்டுவருகிறது. துருக்கி அதன் எல்லைக்குள் ஒரு பகுதியாகக் குர்திஷ்தான் தனிநாடு உருவாகுவதைத் தடுப்பதற்காக குர்திஷ் மக்களை ஒடுக்கி அவர்கள் மீது போர் நடத்தி வருகிறது. இந்தப் பகைமையின் எதிரொலியாக பிரான்ஸில் புலம் பெயர்ந்து வசிக்கும் குர்திஷ் சமூகத்தினருக்கும் துருக்கி

நாட்டவர்களுக்கும் இடையே அடிக்கடி

மோதல்கள் நடப்பது வழக்கம்.



2012 ஆம் ஆண்டு குர்திஷ் தேசியவாத இயக்கமாகிய குர்திஷ் தொழிலாளர் கட்சியின் (Kurdistan Workers' Party) நிறுவனர்களில் ஒருவர் உட்பட அதன் பெண் செயற்பாட்டாளர்கள் மூவர் பாரிஸில் மர்மமான முறையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.