பேரரசி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாரிஸ் நகர ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகள் நேற்றிரவு அணைக்கப்பட்டன.

பாரிஸ் நகரம் ஐக்கிய ராஜ்ஜிய மக்களுடன் துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறது என்று பாரிஸ் நகர மேயர் ஆன் கிடல்கோ தனது ருவீற்றர் பதிவில் தெரிவித்திருக்கிறார். அதேசமயம்  எலிஸே மாளிகையின் பிரதான வாயிலில் ஐக்கிய ராஜ்ஜியக் கொடி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதிபர் எமானுவல் மக்ரோன் விடுத்துள்ள துயர் பகிர்வுச் செய்தி ஒன்றில் பேரரசியை பிரெஞ்சு மக்களின் மனங்களில் நிலையான இடம் பிடித்த "இதயங்களின் ராணி "என்று குறிப்பிட்டிருக்கிறார். 

"மாட்சிமை தாங்கிய ராணி இரண்டாம் எலிசபெத் 70 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷ் தேசத்தின் நீட்சியையும் ஒற்றுமையையும் தன்னகத்தே கொண்டவர். பிரான்ஸின் உற்ற நண்பராக அவரை நான் நினைவில் கொள்கிறேன், தனது தேசத்தையும் தனது நூற்றாண்டையும் அடையாளமாகக் கொண்ட இதயங்களின் ராணி அவர்" - என்று மக்ரோன் தனது ருவீற்றர் பதிவில் எழுதியுள்ளார். 

எலிஸே மாளிகையிலும் நாட்டின் அரசுக் கட்டடங்களிலும் இன்று வெள்ளிக்கிழமை முதல் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்
பறக்கவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் அமெரிக்காவில் வெள்ளை மாளிகை, நாடாளுமன்றக் கட்டடம் உட்பட உலகெங்கும் உள்ள முக்கிய கட்டடங்களிலும் நினைவுச் சின்னங்களிலும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் விடப்பட்டுப் பேரரசியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. 

ஐக்கிய ராஜ்ஜியத்தில் பத்து நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும். எலிசபெத்தின் உடல் நீண்ட பவனிகளில் எடுத்துச் செல்லப்பட்டு மக்கள் அஞ்சலியின் பின்னர் பத்தாவது நாள் அடக்கம் செய்யப்படும்.