தலைநகர் பரிசுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோடை காலத்தின் போது மிக கணிசமான அளவு சுற்றுலாப்பயணிகள் பரிசுக்கும் இல் து பிரான்ஸ் மாகாணத்துக்கும் வருகை தந்துள்ளனர். ‘’2022 ஆம் ஆண்டில் சுற்றுலாற்றுறை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது. முதல் அரையாண்டில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இக்கோடை காலத்தில் வருகை தந்த சுற்றுலாப்பயணிகளில் 40% வீதமானவர்கள் வெளிநாட்டவர்களாவர்’’ என இல் து பிரான்சின் மாகாண முதல்வர் Valérie Pécresse தெரிவித்துள்ளர்.
இக்கோடைகாலத்தில் பரிசுக்கு வருகை தந்த வெளிநாட்டவர்களில் பெரும்பகுதியினர் அமெரிக்கர்கள் எனவும் அதற்கு அடுத்ததாக பிரித்தானியா, ஜெர்மன், ஸ்பெயின், இத்தாலி மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் வருகை தந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையின் பொற்காலமாக திகழ்ந்த 2019 ஆம் ஆண்டினை இந்த எண்ணிக்கை நெருங்கவில்லை என்றபோதும், முந்தைய 2020, 2021 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் மிக குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும் என comité régional du tourisme (CRT) தகவல் வெளியிட்டுள்ளது.
அதேவேளை, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல் து பிரான்ஸ் மாகாணத்தின் சுற்றுலாத்துறை €30 பில்லியன் யூரோக்கள் வருவாய் இழப்பைச் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.