பிரான்ஸின் பெரு நிலப்பரப்பில் அநேகமாக எல்லா மாவட்டங்களிலும் வரட்சி நிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. தலைநகர் பாரிஸ் உட்பட புறநகரங்களை உள்ளடக்கிய நான்கு மாவட்டங்கள்(Paris, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne) வரட்சி மாவட்டங்களின் வரிசையில் இறுதியாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றன.



பாரிஸ் பிராந்தியத்தில் வழமைக்கு மாறாகச் சில மாதங்களாக மழை வீழ்ச்சி குறைவடைந்து வந்துள்ளதைப் புள்ளி விவரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.அதன் காரணமாக நிலத்தடி நீர் வற்றி வருகிறது. நகரத்தை ஊடறுத்துச் செல்லும் செய்ன் நதியின் நீர் மட்டம்

81 m3 / s என்ற அளவுக்குக் கீழே குறைந்துள்ளதாக பாரிஸ் பிராந்திய

பொலீஸ் நிர்வாகத் தலைமைப் பணிமனை தெரிவித்துள்ளது. வரட்சி எச்சரிக்கை மற்றும் தண்ணீர் சேமிப்புச் சிக்கன ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த

வேண்டிய நிலையை இந்த நீர் மட்டம் காட்டுவதாகப் பொலீஸ்

தலைமையகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.



உடனடியாக நீர் வெட்டு அபாயம் ஏற்படாது. எனினும் வீதிகள், கழுவுதல், வாகனங்களைக் கழுவுதல், புல் வெளிகளுக்கு நீர் தெளித்தல் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் வகையிலான

நீர் விரையத் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் முன்னெடுக்க வேண்டி ஏற்படலாம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.



பிரான்ஸின் வரலாற்றில் 1958-1959 ஆம் ஆண்டுக்குப் பின்பு இம்முறை

ஜூலை மாதம் அதி கூடிய வரட்சியான மாதமாகப் பதிவாகியிருக்கிறது.காலநிலை அவதான நிலையத்தின்(Météo-France) தகவலின் படி நாட்டில் 1991 முதல் 2020 வரையான காலப்பகுதி

வழமையான மொத்த மழைவீழ்ச்சியில் 84 வீத பற்றாக்குறையை ஏற்படுத்திய காலப்பகுதியாகக் கணிக்கப்பட்டுள்ளது.