உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பினால் முடங்கிக் கிடக்கின்ற பல மில்லியன் கணக்கான தொன் கோதுமை மற்றும் தானியங்களைக் கருங்கடல்

துறைமுகங்கள் ஊடாக ஏற்றுமதி செய்வதற்கான இணக்கப்பாடு

இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்டுள்ளது.



உக்ரைனும் ரஷ்யாவும் நேரடியாக அன்றி ஐக்கிய நாடுகள் சபை மற்றும் துருக்கி என்பவற்றுடன் தனித்தனியே இதற்கான உடன்படிக்கைகளில்

கைச்சாத்திட்டுள்ளன.



கடும் போருக்கு மத்தியில் எட்டப்பட்டுள்ள இந்தத் தானிய ஏற்றுமதி இணக்கப்பாடு "ஒரு நம்பிக்கை ஒளிக் கீற்று" என்று சர்வதேச மட்டத்தில் புகழப்பட்டுள்ளது. இதன் மூலம்

உலகெங்கும் தானியங்கள் மற்றும் கால்நடைத் தீவனங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறையும்

பட்டினி ஆபத்தும் நீங்கும் என்று

எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா உக்ரைன் மீது கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்கியது முதல் உக்ரைனில் மில்லியன் கணக்கான தொன் தானியங்கள் ஏற்றுமதி தடைப்பட்டு

முடங்கிக் கிடக்கின்றன. அதன் விளைவாக ஆபிரிக்காப் பிராந்தியம் உட்பட உலக நாடுகள் பலவற்றில் கோதுமை இன்றிப் பட்டினி நிலைமை உருவாகின்ற ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.



தானியங்களது முடக்கம் உலகெங்கும் பாண் மற்றும் வெதுப்பக உணவுகள் மற்றும் சமையல் எண்ணெய், கால் நடை உணவுகளது விலைகளில் பெரும் அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது.



கருங்கடல் வழியாகக் கோதுமைத் தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கு வழிசமைத்துள்ள உடன்பாட்டில் மொஸ்கோவுடன் ஒரே மேசையில் அமர்ந்து பேசிக் கைச்சாத்திடுவதற்கு உக்ரைன் இணங்கவில்லை. துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் நகரில் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து

ரஷ்ய வெளிவிவகார அமைச்சரும் உக்ரைன் நாட்டின் உட்கட்டமைப்புத்

துறை அமைச்சரும் வெவ்வேறு மேசைகளில் இருந்தவாறு உடன்பாட்டில் ஒப்பமிட்டனர் என்று அறிவிக்கப்படுகிறது.



இஸ்தான்புல் உடன்பாட்டின் முக்கிய

அம்சங்கள் :



கருங்கடலில் கப்பல்களில் தானியங்கள் ஏற்றப்படும் சமயங்களில் ரஷ்யா துறைமுகங்களை இலக்கு வைத்துத் தாக்கமாட்டாது-



கண்ணிகள் விதைக்கப்பட்ட கடற்பகுதியைக் கப்பல்கள் தாண்டிச் செல்வதற்கு உக்ரைன் கப்பல்கள் வழிகாட்டிச் செல்லும் -



தானியக் கப்பல் என்ற போர்வையில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் கடத்தப்படலாம் என்ற ரஷ்யாவின் கவலையை நீக்குவதற்காகத் துருக்கி நாடு ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் சரக்குக் கப்பல்களைப்

பரிசோதிக்கும் -



கருங்கடல் ஊடான ரஷ்யாவின் தானியம் மற்றும் உர வகைகளின் ஏற்றுமதியும் இதன் மூலம் இலகுவாக்கப்படும்.