அறுதிப் பெரும்பான்மை 
மக்ரோனுக்குக் கிட்டாது! 

பிரான்ஸின் நாடாளுமன்றத் தேர்தலின்
முதற்சுற்று முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. உத்தேச மதிப்பீடுகளின் படி அதிபர் மக்ரோனின்
ஆளும் தரப்புக் கூட்டணி அறுதிப் பெரும்பான்மையைப் பெறமுடியாத
நிலையில் இருக்கிறது.

கடும் போக்கு இடதுசாரி ஜோன் லூக் மெலன்சோனால் உருவாக்கப்பட்ட "நியூப்ஸ்"(Nupes - Nouvelle Union Populaire Écologique et Sociale) என்னும் இடதுசாரிகள் கூட்டணி அதிகமான
தொகுதிகளில் முதனிலை பெற்றுள்ளது.
ஆளும் கட்சிக்கும் அந்தக் கூட்டணிக்கும்
இடையே சரிக்குச் சமனான கடும்போட்டி நிலவுவதை முடிவுகள் காட்டுகின்றன. 

மக்ரோனின் ஆளும் மூன்று கட்சிக் கூட்டணி நாடாளுமன்றத்தில் அறுதிப்
பெரும்பான்மை பெறுவதற்கு குறைந்தது 289 ஆசனங்களை வெல்ல வேண்டும். முதற்சுற்று மதிப்பீடுகளின் படி ஆளுங்கட்சிக்கு 255 ஆசனங்களே
கிடைக்கும் என்றும் மெலன்சோன் கூட்டணி 150 - 190 இடங்களைக் கைப்பற்றலாம் என்றும் கணிக்கப்படுகிறது. தீவிர வலது சாரி
மரின் லூ பென் கட்சி மூன்றாவது இடத்தில் 20-45 ஆசனங்களை வெல்லும் நிலையில் உள்ளது. 

நாடாளுமன்றத்தில் இடதுசாரி அலை வீசப்போவதை முடிவுகள் கோடி காட்டுவதாக தேர்தல் அவதானிகள்
குறிப்பிடுகின்றனர்.மக்ரோனின் கட்சி தாக்கப்பட்டுத் தோற்கடிக்கப்பட்டுள்ளது
என்றும் இரண்டாவது இறுதிச் சுற்றில் தமது தரப்புக்கு மேலும் பெரும் வெற்றி கிட்டும் என்றும் மெலன்சோன் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். 

சமீப கால தேர்தல்கள் வரலாற்றில் தொடர்ந்து வருவது போன்று இந்தத் தேர்தலிலும் வாக்களிக்காதோர் வீதம் புதிய சாதனையைத் தொட்டுள்ளது.
வாக்காளர்களில் இருவரில் ஒருவர் வாக்களிப்பில் பங்குபற்றவில்லை என்பதைக் காட்டும் விதமாக வாக்களிக்காதோர் வீதம் 52.5% ஆகப் பதிவாகியுள்ளது.

இரண்டாவது இறுதிச் சுற்று எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.