சிறைச்சாலைக்குள் வைத்து தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமூக ஆர்வலர் Yvan Colonna, மூன்று வாரங்களின் பின்னர் மரணமடைந்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை Marseille மருத்துவமனை ஒன்றில் தனது 61 ஆவது வயதில் அவர் மரணமடைந்துள்ளார். மூன்று வாரங்களுக்கு முன்னர் இவர் சக கைதி ஒருவரால் தாக்கப்பட்டிருந்தார். பயங்கரவாதத்துடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகத்தின் பேரில் அடைத்துவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவன் தாக்கியதில் Yvan Colonna கோமா நிலைக்குச் சென்றிருந்தார். முதலில் Arles (Bouches-du-Rhône) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், பின்னர் Marseille நகர மருத்துவமனை ஒன்றுக்கு மாற்றப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று, மார்ச் 21 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி சாவடைந்துள்ளார்.
சமூக ஆர்வலரான Yvan Colonna தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து Corsica தீவின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இரு வாரங்களுக்கு மேலாக நீடித்த இந்த வன்முறைச் சம்பவங்களில் 102 பேர் காயமடைந்திருந்தனர். அதையடுத்து இரவு நேரங்களில் அங்கு ஊரடங்கு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டை வந்தடைந்துள்ள நிலையில், Yvan Colonna சாவடைந்துள்ளமை மீண்டும் வன்முறைக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து Corsica தீவு உஷார் நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.