மகிழுந்து மோதியதில் காவல்துறை அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
பரிசில், புதன்கிழமை பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பரிஸ் 8 ஆம் வட்டாரத்தில், காவல்துறை அதிகாரிகள் சிலர் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மகிழுந்து ஒன்று அதிவேகமாக பயணிப்பதை கவனித்து, அதனை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் காவல்துறையினரின் அறிவிப்பை பொருட்படுத்தாமல், மகிழுந்து தொடர்ந்து வேகமாக பயணித்துள்ளது.
இதன்போது, காவல்துறை அதிகாரி ஒருவர் மீது மகிழுந்து மோதியது. அதிகாரி மீது மோதிய மகிழுந்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. காவல்துறை அதிகாரி எலும்பு முறிவுக்கு உள்ளாகி, படுகாயமடைந்துள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
இதேவேளை, இச்சம்பவத்தின் போது உடனிருந்த அதிகாரிகள் தப்பி ஓடிய மகிழுந்தின் இலக்கத்தகடை அவதானித்து, அதனை துரத்திக்கொண்டு சென்றுள்ளனர். ஒரு மணிநேரம் கழித்து குறித்த மகிழுந்து பரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதை பார்த்துள்ளனர்.
46 வயதுடைய குறித்த மகிழுந்து சாரதி உடனடியாக கைது செய்யப்பட்டார். அவர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணைகள் இடம்பெற்று வருகிறது