பயணப்பெட்டியில் (சூட்கேஸ்) அடைக்கப்பட்ட சடலம் ஒன்று மருத்துவமனை ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் உள்ள Pitié-Salpêtrière மருத்துவமனையில் இச்சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. மாலை 6.30 மணி அளவில் மருத்துவர் ஒருவர் சக மருத்துவர் ஒருவருடன் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அதன்போது குறித்த மருத்துவமனையின் அருகே சூட்கேஸ் பெட்டி ஒன்றும், சில பைகள், மேலும் சில உடமைகளும் வீசப்பட்டிருப்பதை பார்த்துள்ளார்.
சந்தேகத்துக்கு இடமான இந்த பொருட்களை அவர் நெருங்கிச் சென்றிருந்தபோது, சூட்கேஸ் பெட்டிக்குள் சடலம் ஒன்று இருப்பதை பார்த்துள்ளார்.
உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளனர்.
சடலம் மீட்கப்பட்டு, விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டது. Chennevières-sur-Marne (Val-de-Marne) நகரில் வசிக்கும் 36 வயதுடைய ஒருவரே படுகொலை செய்யப்பட்டு, அங்கு வீசப்பட்டுள்ளதை அதிகாரிகள் அறிந்துகொண்டனர்.
காவல்துறையினர் விசாரணைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்