உக்ரேனிய அகதிகளுக்கு உதவுவதற்காக பிரெஞ்சு இளைஞன் ஒருவர் தொலைபேசி செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார்.
இந்த செயலியானது, உக்ரைன் அகதிகளுக்காக பிரான்சில் ‘கிடைக்கக்கூடிய’ தங்குமிடங்களை எளிதில் கண்டறிய உதவுகிறது. தங்குமிடங்கள் அமைந்துள்ள இடம், அங்கு கிடைக்கும் வசதிகள், தொடர்பு இலக்கங்கள் போன்ற தரவுகளை இந்த செயலி தெரிவிக்கின்றது.
‘பிரான்சில் வசிப்பவர்கள் உக்ரைன் அகதிகளுக்கு தங்குமிடம் வழங்க விரும்பினால், நீங்கள் இந்த செயலி ஊடாக உங்கள் விபரங்களை பதிவு செய்துகொள்ளலாம்!’ என செயலியினை உருவாக்கிய இளைஞன் தெரிவித்துள்ளார்.
இந்த செயலி பயன்பாட்டுக்கு வந்த மூன்று நாட்களில் Brittany, Aveyron, Lot, Pays de la Loire, Dordogne, Somme, Isère மற்றும் Alpes-Maritimes போன்ற நகரங்களைச் சேர்ந்த 68 பேர் வரை தங்களை பதிவு செய்து ‘தங்குமிட்டம் வழங்க முன்வந்துள்ளதாகவும்’ அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த செயலியை பயன்படுத்தி இதுவரை 17 பேருக்கு தங்குமிடங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
Vannes (Morbihan) நகரில் வசிக்கும் Sébastien Champalaume எனும் இளைஞனே இந்த செயலியை (App) உருவாக்கியுள்ளார்.
அவர் தெரிவிக்கையில், “நான் தொலைக்காட்சியில் உக்ரேனிய அகதிகள் வீடற்று வீதியில் நிற்பதை பார்த்தேன். எனது வீட்டில் ஏற்கனவே இடமில்லை என்பதால், எனது திறனை பயன்படுத்தி அவர்களுக்கு உதவ முற்பட்டேன். அதன் முடிவில் இந்த செயலியை நான் உருவாக்கினேன்!” என அவர் தெரிவித்தார்