உக்ரைன் விவகாரம் உச்சமடைந்துள்ள நிலையில் ரஷ்யாவை சமாதானப்படுத்தும் முயற்சியாக சென்ற பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கடுமையான கெடுபிடிகளுக்கு ஆளாக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 7 ஆம் திகதி, ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனும் பேச்சுவார்த்தை நடத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் இருவரும் மிக நீண்ட மேசைக்கு எதிரெதிரே அமர்ந்திருக்கின்றனர். அந்த மேசையின் நீளம் 13 அடி எனத் தெரிகிறது.
ரஷ்யா விதித்த கொரோனா கெடுபிடிகளை பிரான்ஸ் ஜனாதிபதி ஏற்காததால் அவருக்கு இத்தகைய கெடுபிடிகள் காட்டப்பட்டதாகத் தெரிகிறது.
ரஷ்ய பயணத்திற்கு முன்னர் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அதனை மக்ரோன் நிராகரித்து விட்டார். அதனாலேயே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் 13 அடி நீள மேசையில் எதிரெதிரே ஜனாதிபதிகள் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர் எனக் கூறப்படுகிறது.மேலும் இந்த சந்திப்பின்போது இருநாட்டுத் தலைவர்களும் கைகுலுக்கிக் கொள்ளவும் அனுமதிக்கப்படவில்லை.
ரஷ்யா வந்தடைந்தவுடன் மக்ரோனுக்கு ரஷ்ய மருத்துவர்கள் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கும் மறுப்பு தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி, பிரான்ஸில் இருந்து கிளம்புவதற்கு முன்னரே ஆடி பிசிஆர் மற்றும் அன்டிஜென் சோதனைகளை மேற்கொண்டு வந்தார்.
சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க ரஷ்யா மேற்கொண்ட முயற்சி விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. ஒரு நாட்டின் ஜனாதிபதியை ரஷ்யா இத்தகைய செயல் மூலம் அவமதித்துள்ளதாகவும் எதிர்ப்புக் குரல்கள் கிளம்புகின்றன.
அதே வேளையில் ரஷ்ய ஜனாதிபதியின் க்ரெம்ளின் மாளிகை வட்டாரமோ, ஜனாதிபதி புடினின் ஆரோக்கியத்தைப் பேணுவதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள முடியாது. அதனாலேயே இத்தகைய கெடுபிடியைக் கடைப்பிடிக்க வேண்டியதாயிற்று என்று விளக்கம் கொடுத்துள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் ரஷ்யா வந்து சென்ற சில நாட்களில் கசகஸ்தான் நாட்டு ஜனாதிபதி காசிம் ஜோமர்ட் டொகயேவ் ரஷ்யா வந்தார். அவரை புடின் கைகுலுக்கி வரவேற்றார். இருவருக்கும் இடையே ஒரு சிறிய தேனீர் மேசை மட்டுமே இருந்தது.இது பிரான்ஸ் ஜனாதிபதிக்கு விதிக்கப்பட்ட கெடுபிடி சர்ச்சையை மேலும் வலுவடையச் செய்துள்ளது.