
(சிவா)
பாரிஸின் புறநகர்ப் பகுதியான சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) மாவட்டத்தில் உள்ள பொபினி (Bobigny) நகரில் இன்று (மே 30, சனிக்கிழமை) பிற்பகலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறில் இருவரைக் கத்தியால் குத்திக் காயப்படுத்திய நபர் ஒருவர், காவல்துறையினரையும் தாக்க முற்பட்டபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.


எக்டர் பெர்லியோஸ் (Hector Berlioz) தெருவில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில்தான் இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அண்டை வீட்டாருக்கு இடையே மோதல் நடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், பிராந்தியக் காவல் பிரிவைச் (Brigade territoriale de contact) சேர்ந்த மூன்று அதிகாரிகள் பிற்பகல் 2:20 மணியளவில் அங்கு விரைந்துள்ளனர். காவல்துறையினர் வருவதைப் பார்த்த அந்த நபர், தனது இரண்டு கைகளிலும் தலா ஒரு கத்தியை ஏந்தியபடி ஆக்ரோஷமாக அவர்களை நோக்கி வந்துள்ளார்.
ஆபத்தை உணர்ந்த காவல் அதிகாரி ஒருவர், முதலில் அந்த நபரைத் தன் காலால் உதைத்துப் பின்னுக்குத் தள்ளியுள்ளார். இருப்பினும் சற்றும் பின்வாங்காத அந்த நபர் மீண்டும் அதிகாரிகளை நோக்கிக் கத்தியுடன் பாய்ந்துள்ளார். வேறு வழியின்றித் தற்காப்புக்காக அந்த அதிகாரி தனது அரசுத் துப்பாக்கியால் (Arme administrative) அந்த நபரின் வயிற்றுப் பகுதியில் குறைந்தது இரண்டு முறை சுட்டுள்ளார்.
துப்பாக்கிக் குண்டு பாய்ந்து படுகாயமடைந்த அந்த நபருக்கு அவசர மருத்துவப் படையினர் (Samu) சம்பவ இடத்திலேயே தீவிரச் சிகிச்சையளித்தும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கத்திக்குத்தில் காயமடைந்த அவரது அண்டை வீட்டார் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்துப் பொபினி அரசு வழக்கறிஞர் (Parquet de Bobigny) அலுவலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. மேலும், காவல் துறையினரின் நடவடிக்கைகளை விசாரிக்கும் சிறப்புப் பிரிவான 'ஐ.ஜி.பி.என்' (IGPN - Inspection générale de la police nationale) இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்த முழுமையான விசாரணையை தற்போது மேற்கொண்டு வருகிறது.