அது எதில்போய் முடிந்தது என்பது தெரிந்திருந்தும் கூட நெப்போலியன் காலத்துக்குத் திரும்பச் செல்வது இப்போதும் சிலரது விருப்பமாக உள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்
இவ்வாறு பிரான்ஸின் அரசுத் தலைமையை மறைமுகமாகச் சாடியிருக்கிறார்.
அதிபர் மக்ரோன் தொலைக்காட்சி உரையில் ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு எதிராக ஐரோப்பா அணி திரளவேண்டிய நேரம் வந்துவிட்டது என்ற சாரப்பட வெளியிட்ட கருத்துக்குப் பதிலடியாகவே புடின் இந்தப் பதிவை வெளியிட்டிருக்கிறார் என நம்பப்படுகிறது.
பேரரசர் நெப்போலியன் பொன்னபார்ட் 1812 இல் ரஷ்யப் பேரரசின் மீது படையெடுத்து, மொஸ்கோவைக் கைப்பற்றினார், ஆனால் அவரது அந்த முயற்சி பிரெஞ்சு இராணுவத்திற்குப் பேரழிவு தரும் பின்வாங்கலில் போய் முடிவடைந்தது. அந்த வரலாற்று
நிகழ்வையே புடின் பிரான்ஸின் தற்போதைய நிலைப்பாட்டுடன் ஒபெபிடுகிறார்.
புடினின் கருத்தை ஒத்த விதமாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ் (Sergei Lavrov) மக்ரோனை ஹிட்லருடனும் நெப்போலியனுடனும் ஒப்பிட்டு இருவருமே ரஷ்யாவைத் தோற்கடிக்கவும் வெற்றிகொள்ளவும் விரும்பியவர்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மக்ரோன் தனது உரையில் "ரஷ்யாவால் ஆபத்து" எனக் குறிப்பிட்டிருப்பது பற்றிக் கருத்துத் தெரிவித்த கிரெம்ளின் பேச்சாளர், மக்ரோனின் கூற்றுக்கள் போர் நீடிப்பதையே பிரான்ஸ் விரும்புகிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன- என்றார்.
மக்ரோன் ஆற்றிய தொலைக்காட்சி உரையை 15.1மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர்.
உக்ரைன் விடயத்தில் அமெரிக்கா எடுத்துள்ள புதிய நிலைப்பாட்டைத் தொடர்ந்து, வோஷிங்டனை ரஷ்யாவின் "கூட்டாளி" என்று மொஸ்கோப் பத்திரிகை ஒன்று வர்ணித்துள்ளது. அதேசமயம் கடந்த சில நாட்களாக ரஷ்ய அதிகாரிகள் ஐரோப்பாவை நிராகரிக்கும் விதமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
"ஐரோப்பா செல்வாக்கிழந்துவிட்டது" என்று ரஷ்ய அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அமெரிக்கா-ரஷ்யா-சீனா ஆகிய திரிகோண சக்திகளின் மத்தியில் மொஸ்கோவைப் பொறுத்தவரை ஐரோப்பா இனி ஒரு பெரும் சக்தியாக இருக்காது என்று அது மேலும் கூறுகிறது.
ரஷ்யாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்குத் தயாராக ஐரோப்பாவை ஆயுதமயப்படுத்திப் பலப்படுத்தும் பேச்சுக்களை அதன் தலைவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். பிரெசெல்ஸ் நகரில் இது தொடர்பான அதி முக்கிய கூட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை கூட்டப்பட்டுள்ளது. மக்ரோன்,உட்பட இருபது நாடுகளின் தலைவர்கள் கூடிய அந்தக் கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஷெலென்ஸ்கியும் கலந்துகொண்டிருக்கிறார்.
பாதுகாப்புச் செலவீனங்களை அதிகரிப்பதற்கும் போர்க்கால அடிப்படையில் பொருளாதாரத் திட்டங்களை வகுப்பதற்கும் ஐரோப்பிய நாடுகள் இணங்கியுள்ளன. இந்த நிலையிலேயே மொஸ்கோவில் இருந்து ஐரோப்பா தொடர்பான
கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.