எல்லைப் பொலீஸார், ஜொந்தாம் படையினர் மற்றும் சுங்கப் பிரிவினர் ஸ்பெயின் மற்றும் கற்றலோனியா பகுதிகளில் இருந்து பிரான்ஸுக்குள் வருகின்ற சகல ரயில்களிலும் கடந்த திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் சோதனைகளை நடத்தியுள்ளனர். அதேசமயம் இத்தாலியில் இருந்து உள்வருகின்ற நெடுஞ்சாலைகளிலும் கார்கள் மற்றும் வாகனங்களில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

சட்டவிரோத குடியேறிகள், போதைப் பொருள் கடத்துவோர், மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டுபிடித்துத் தடுப்பதற்காக நாளாந்தப் பாதுகாப்பை உறுதி செய்கின்ற பொலீஸ் சோதனை நடவடிக்கைகள் நாடெங்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உள்துறை அமைச்சர் புறுனோ ரெத்தாயோவின் உத்தரவின் பேரில் விசேட பொலீஸ் மற்றும் படைப் பிரிவினர் மாவட்டங்கள் தோறும் இந்த விசேட சோதனை மற்றும் தேடுதல் சுற்றிவளைப்புகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஸ்பெயின் ரயில்கள் உள்நுழைகின்ற Perpignan ரயில் நிலையத்தில் இரண்டு தினங்கள் வெளிநாட்டுப் பயணிகளிடம் நடத்தப்பட்ட அடையாள அட்டைப் பரிசோதனைகளில் சரியான

அடையாள ஆவணங்கள் இல்லாத குடியேற்றவாசிகள் முப்பது பேரும், தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Perpignan பெருநகரப் பகுதியில்

இடம்பெற்றுவருகின்ற திட்டமிட்ட குற்றச் செயல்கள், போதைப் பொருள், ஆயுதக் கடத்தல் போன்ற செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காகவும் அங்கு திடீர்த்தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

ரயில்களில் மொத்தம் 2ஆயிரத்து 680 பேரிடம் அடையாள ஆவணப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதேபோன்ற சோதனைகள் சகல மேலும் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து நடத்தப்படவுள்ளன.