ஐரோப்பாவை மிக விரைவாக வலுப்படுத்துவதே எனது முக்கிய முன்னுரிமைப் பணியாக இருக்கும். அதன்மூலம் நாம் படிப்படியாக அமெரிக்காவிடமிருந்து சுதந்திரமடைய முடியும்.

-ஜேர்மனியின் புதிய சான்சிலராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்ற ஃபிரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை வாக்களிப்பு முடிந்த கையோடு பேர்ளினில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய சமயத்திலேயே அவர் இப்படிக் கூறினார்.

அமெரிக்காவின் தலையீடுகள் நிறைந்த ஒரு தேர்தலாகப் பார்க்கப்படுகின்ற ஜேர்மனியின் பொதுத் தேர்தலில் ஃபிரெட்ரிக் மெர்ஸின் பழமைவாதக்

கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி (CDU) அதிக இடங்களைக் கைப்பற்றி வெற்றியீட்டியுள்ளது. அதனையடுத்து ஃபிரெட்ரிக் மெர்ஸ் கூட்டணி அரசு ஒன்றை நிறுவிப் புதிய சான்சிலராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை எதிர்க் கட்சியாக விளங்கி வந்த கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சிக் கூட்டணிக்கு 28.6% வாக்குகள் கிடைத்துள்ளன.

எதிர்பார்க்கப்பட்டது போலவே தீவிர வலதுசாரிக் கட்சி(far-right Alternative for Germany - AfD) இரட்டிப்பு வாக்குகளை அள்ளி இரண்டாம் இடத்துக்கு முன்னேறி வந்திருக்கிறது. அந்தக் கட்சிக்கு 20.8% சதவீத வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

தற்போதைய சான்சிலர் ஒலாப் சோல்ஸின் மைய இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சிக்கு (center-left Social Democratic Party - SPD) ஆக 16.4% வீத வாக்குகளே கிடைத்துள்ளன.

முன்னணியில் உள்ள ஃபிரெட்ரிக் மெர்ஸ், இரண்டாவது இடத்தில் உள்ள தீவிர வலதுசாரிக் கட்சியை

தவிர்த்துவிட்டு ஒலாப் சோல்ஸின் இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து கூட்டணி அரசை நிறுவவுள்ளார். எதிர்வரும் ஏப்ரலில் புதிய அரசு பதவிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தல் பிரசாரத்தின் போது அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகத்தைச் சேர்ந்த அமைச்சராகிய எலன் மாஸ்க் ஜேர்மனியின் தீவிர வலதுசாரிகளுக்குப் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துப் பரப்புரையில் பங்கெடுத்திருந்தார்.