பாரிஸ் 11 ஆவது நிர்வாகப் பிரிவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீடொன்றில் நேர்ந்த தீ அனர்த்தம்  
தொடர்பான விசாரணைகளில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

பெரும் வெடிப்புச் சத்தத்தை அடுத்து எரிந்த அந்தச் சிறிய வீட்டின் உள்ளே கருகி அடையாளம் தெரியாத நிலையில் மீட்கப்பட்ட உடல்கள் இரண்டிலும் தலையில் துப்பாக்கிச் சூட்டை ஒத்த காயங்கள் காணப்படுகின்றன. எனினும் துப்பாக்கி எதுவும் அங்கு இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. சடலங்கள் யாருடயவை என்றும் இன்னமும் அடையாளம் கணப்படவில்லை. 

பாரிஸ் அரச சட்டவாளர் அலுவலகம் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு எட்டு மணி வாக்கில் இந்தத் தீவிபத்துச் சம்பவம் இடம்பெற்றது தெரிந்ததே. 
ஏழாவது தளத்தில் உள்ள அந்த வீட்டில் தீ பரவியதும் சுமார் நாற்பது வயது மதிக்கத் தக்க ஆண் ஒருவர் அங்கிருந்து ஜன்னல் வழியாகக் கீழே குதித்ததில் உயிரிழந்தார். அவர் யார் என்று இன்னமும் அடையாளம் காணப்படவில்லை. நவிகோ பிரயாண அட்டை உட்பட ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வெவ்வேறு அடையாள ஆவணங்கள் அவர்வசம் இருந்து மீட்கப்பட்டுள்ளன. 

இந்த அனர்த்தத்தில் உயிரிழந்த மூவரும் ஒரே குடும்பத்தினரா என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. 

நகர எரிவாயு இணைப்பு வசதியோ வேறு சிலிண்டர் வசதிகளோ இல்லாத அந்தக் குடியிருப்புக் கட்டடத்தில் எரிவாயுவினால் வெடிப்பு நேர்வது சாத்தியமில்லை என்பதைச் சம்பவம் நடந்த சமயத்திலேயே அயலவர்கள்
உறுதிப்படுத்தியிருந்தனர். 

தீ பரவுவதற்கு முன்பாகக் கேட்ட பெரும் வெடிப்பு ஒலி எதனால் ஏற்பட்டது என்பது இன்னமும் தெரியவரவில்லை. விசாரணையாளர்கள் அதனை அறிவதற்கு முயன்று வருகின்றனர். தீ விபத்து நடந்த அன்றைய பகல்ப் பொழுதில் வீட்டின் உள்ளே வெடிச் சத்தங்கள் கேட்டன என்று அயலவர்கள் சிலர் தங்கள் சாட்சியங்களில் கூறியிருக்கின்றனர். 

வீட்டின் உள்ளே இருந்து பெற்றோலில் நனைக்கப்பட்ட துணி மற்றும் கடதாசிகளை விசாரணையாளர்கள் மீட்டிருக்கின்றனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. 

தடயங்கள் இது ஒரு இரட்டைக் கொலைச் சம்பவமாக இருக்கலாம் என்ற சந்தேகங்களை ஏற்படுத்தி இருப்பதால் குற்றவிசாரணைப் பொலீஸ் பிரிவினர் விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.