ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களது வாயிலிருந்து"போர்" என்ற வார்த்தை

அடிக்கடி வெளியாகிவரத் தொடங்கியிருகின்றது.

போலந்து நாட்டின் பிரதமர் டொனால்ட் ரஸ்க் (Donald Tusk), ஐரோப்பா போருக்கு முந்திய சகாப்தம் ஒன்றினுள் பிரவேசித்து விட்டது என்றும் உக்ரைன் தோற்கடிக்கப்பட்டால் ஐரோப்பாவில் எவருமே பாதுகாப்பை உணரமுடியாமற் போகும் என்றும் பகிரங்க எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

"அடுத்த இரண்டு ஆண்டுகள் முக்கியமானவை. எதுவும் நடக்கலாம்" - என்று அவர் ஐரோப்பாவின் முக்கிய பத்திரிகையாளர்களது சந்திப்பு ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

"நான் யாரையும் பயமுறுத்தவில்லை. ஆயினும் போர் என்பது இப்போது இறந்த காலத்துக்குரிய ஒன்றல்ல.." - எந்த ஒரு நிலைமையும் சாத்தியம். இது ஒரு பேரழிவு குறிப்பாக இளைய தலைமுறையினருக்குப் பேரழிவாக இருக்கும் என்பதை நான் அறிவேன். ஆயினும் நாளாந்தம் உருவாகி வருகின்ற போருக்கு முந்திய சகாப்தத்துக்கு(pre-war era) மனதளவில் நாம் தயாராக வேண்டும். ஐரோப்பா நிச்சயம் ஆயத்தமாக வேண்டும். அதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்லவேண்டி இருக்கும் "- என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

ரஷ்யா உக்ரைன் மீதான தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்திவரும் நிலையில் போலந்துப் பிரதமரது இந்தக் கருத்துக்கள் வெளிவந்திருக்கின்றன.

இதே மாதிரியான கருத்தை பிரான்ஸின் அதிபர் மக்ரோனும் அண்மையில் வெளியிட்டிருந்தார்.

தீவிரமான ஐரோப்பிய ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஒரு மையவாதியாகிய டொனால்ட் ரஸ்

கடந்த ஆண்டு இரண்டாவது முறையாகப் போலந்தின் பிரதமராகத் தெரிவாகியிருந்தார்.

கடந்தவாரம் ரஷ்யாவின் ஏவுகணை ஒன்று போலந்தின் வான்பரப்பினுள் பிரவேசித்ததை அடுத்துப் போலந்து அதன் எப்-16 போர் விமானங்கள் மூலம் அதனைத் தடுக்க முயன்றிருந்ததது.

இந்தச் சம்பவம் "மிகவும் குழப்பத்துக்கு ரியது"என்று பிரதமர் டொனால்ட் ரஸ் சுட்டிக்காட்டினார்.

மொஸ்கோ அருகே ஐஎஸ் தீவிரவாத இயக்கம் உரிமைகோரி நடத்திய பெரும் தாக்குதலில் உக்ரைனைத் தொடர்புபடுத்தும் விதமான-வலிந்த ஆதாரங்கள் அற்ற- கருத்துக்களை அதிபர் புடின் வெளியிட்டு வருகிறார்.

உக்ரைனில் சிவிலியன்களுக்கு ஏற்படக் கூடிய உயிர்ச் சேதங்களை நியாயப்படுத்துகின்றவிதமான உள் நோக்கத்துடனேயே புடின் இவ்வாறு கூறிவருகிறார் என்று அவதானிகள் கருதுகின்றனர்.

 சமீப வாரங்களில் உக்ரைன் மீது ரஷ்யா தனது குண்டுவீச்சைத் தீவிரப்படுத்தியுள்ளது.

அதேசமயம் மொஸ்கோவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்யா உக்ரைன் தலைநகரை முதல் முறையாகப் பகல் நேரத்தில் ஹிப்பசோனிக் ஏவுகணைகள் (hypersonic missiles) மூலமும் தாக்கியிருக்கின்றது.

2022 பெப்ரவரி முதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக உக்ரைன் மீது போர் நடத்தி வருகின்ற புடின், நேட்டோ நாடுகளைத் தாக்கும் நோக்கம் கிடையாது என்று திரும்பத் திரும்பக் கூறிவருகின்றார். ஆயினும் அவரது அடுத்த இலக்காகப் போலந்து மற்றும் பால்டிக் நாடுகள் ஆக்கிரமிக்கப்படும் ஆபத்து உள்ளது என்று உக்ரைன் எச்சரித்து வருகிறது.