ஓய்வூதிய சீர்திருத்தத்தின் இறுதிக்கட்ட வாக்கெடுப்பு நேற்று நள்ளிரவு செனட் சபையில் இடம்பெற்றது. அதிக ஆதரவு வாக்குகள் பெற்ற நிலையில், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் புதிய ஓய்வூதிய சீர்திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு ஆதரவாக 195 வாக்குகளும், எதிராக 112 வாக்குகளும் பதிவாகின.

இதனால் கடந்த 10 நாட்களாக செனட் மேற்சபையில் இடம்பெற்று வந்த விவாதம் நேற்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்து, அதிக வாக்குகளுடன் ஓய்வூதிய சீர்திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தற்போது 62 ஆக இருக்கும் ஓய்வூதிய வயதெல்லையை 64 ஆக உயர்த்தக்கோரும் இந்த சீர்திருத்தத்தினை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது முதன்முதலாக அறிவித்திருந்தார். பொருளாதார எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சீர்திருத்தத்தைக் கண்டித்து நாடு முழுவதும் பலத்த ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள் இடம்பெற்றிருந்தன.

குறிப்பாக பொது போக்குவரத்து, கல்வித்துறை, பெற்றோலியம் போன்ற பல்வேறு துறைசார்ந்த ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

செனட் சபையில் வாக்கெடுப்புக்கு வந்த இறுதி நாளான நேற்று சனிக்கிழமையும் நாடளாவிய ரீதியில் பலத்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.