காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.  செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Rennes நகரில் காவல்துறையினர் இரவு நேர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்கிடமான மகிழுந்து ஒன்று பயணிப்பதை பார்த்தனர். குறித்த மகிழுந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அதிகாரிகள் குறித்த மகிழுந்தை தடுத்து நிறுத்த முற்பட்டனர்.

ஆனால் அதிகாரிகளின் கட்டுப்பாட்டை மீறி, மகிழுந்து அங்கிருந்து தப்பிச் சென்றது. அதன்போது காவல்துறை அதிகாரி ஒருவரை மகிழுந்து மோதியது.

இதில் காவல்துறை அதிகாரி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.

அதிகாரியை மோதிவிட்டு குறித்த மகிழுந்து தொடர்ந்து தப்பிச் செல்ல முற்பட்டபோதும், அதிகாரிகளில் ஒருவர் மகிழுந்து நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில், மகிழுந்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த 21 வயதுடைய இளம் பெண் ஒருவர் கொல்லப்பட்டார். மார்பில் குண்டு பாய்ந்ததை அடுத்து, அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.

மகிழுந்து சாரதி (24 வயது) காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைதான நபர் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் நன்கு அறியப்பட்டவர் என காவல்துறையினர் குறிப்பிட்டனர்.