சுகாதார அட்டைகளை (pass sanitaire) போலியாக தயாரித்து விற்பனை செய்து வந்த ஒன்பது பேர் கொண்ட குழுவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Nancy நகரை தலைமையாக கொண்டு இயங்கிய மேற்படி குழுவை, பல மாத விசாரணைகளின் முடிவில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த குழு சுகாதார அட்டைகளை போலியாக தயாரித்து, €100 யூரோவில் இருந்து €400 யூரோக்கள் வரை விற்பனை செய்து வந்துள்ளது. இதுவரை இவர்கள் 7,000 போலி சுகாதார அட்டைகள் தயாரித்து விற்பனை செய்துள்ளனர்.
குறித்த குழுவினர் கடந்த ஓகஸ்ட் மாதம் Grand Est மாகாணத்தைச் சேர்ந்த 15 மருத்துவ நிலையங்களினது கணணியை ‘ஹக்’ (Hack) செய்து, இந்த சுகாதார அட்டைகளை தயாரித்துள்ளனர். அவர்கள் தயாரித்த சுகாதார அட்டைகள் போலியானவை என்றபோதும், கணணிமயமாக்கப்பட்டதால், வேறு இடங்களில் பரிசோதனைக்குட்படுத்தப்படும் போது அவற்றை போலி என நிருபிக்க முடியாது என காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
நன்கு திட்டமிட்டு செயற்பட்டு வந்த மேற்படி ஒன்பது பேர் கொண்ட குழுவை, காவல்துறையினர் ஒரே நாளில் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர்.