கடந்த 50 நாட்களுக்கு மேலாக உக்ரைன்-இரஷ்யா யுத்தம் இடம்பெற்று வரும் நிலையில் - இவ்வாரத்தில் பிரான்ஸ் உக்ரைனுக்கு இராணுவ ஆயுதங்களை அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
சீசர் துப்பாக்கிகள் (Caesar guns) மற்றும் மிலன் கவசவாகன ஏவுகணைகளையும் (des missiles antichars Milan) ஆயுதங்களையும் பிரான்ஸ் அனுப்பி வைத்துள்ளது. இத்தகவலை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை Ouest-France ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்தார். ஆனால் மேற்படி ஆயுதங்கள் புதிதாக வாங்கப்பட்டவையா.. அல்லது பிரெஞ்சு இராணுவத்தினரிடம் இருந்து பெறப்பட்டு உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்டதா என்பது குறித்த தகவல்களை மக்ரோன் வெளியிடவில்லை.
சீசர் துப்பாக்கிகளுடன் சேர்த்து சில தொன் எடைகொண்ட ஷெல்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவ்வகை துப்பாக்கிகள் 155 மில்லிமீற்றர் ரவைகளை கொண்டவை. கவச வாகனத்தில் பொருத்தக்கூடிய இவ்வகை துப்பாக்கிகள் 40 கிலோமீற்றர் தூரத்துக்கு இலக்கு வைத்து பாயுறம் திறன் கொண்டவை.
இவ்வார ஆரம்பத்தில் அனுப்பப்பட்ட இந்த ஆயுதங்கள் நேற்று ஏப்ரல் 23 ஆம் திகதி, சனிக்கிழமை உக்ரைனைச் சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது