தொடருந்துக்கு கீழே சிக்குண்ட சிறுமி ஒருவர், உடலில் காயங்களின்றி உயிர் தப்பியுள்ள சம்பவம் ஒன்று Val-d’Oise இல் இடம்பெற்றுள்ளது.
நேற்று திங்கட்கிழமை காலை இங்குள்ள Louvres தொடருந்து நிலையத்துக்கு 10 மற்றும் 14 வயதுடைய இரு சிறுமிகள் வருகை தந்துள்ளனர். இருவரும் நடைமேடையில் தொடருந்துக்காக காத்திருந்துள்ளனர். சில நிமிடங்களில், அவர்களில் 14 வயதுடைய சிறுமி, தொடருந்து ஒன்று வருவதை கவனித்துவிட்டு, திடீரென தண்டவாளத்தில் பாய்ந்துள்ளார்.
குறித்த சிறுமி தற்கொலை செய்துகொள்ளும் முடிவில், தண்டவாளத்தில் படுத்துக்கொண்டுள்ளார்.
தொடருந்து சாரதி இச்சம்பவத்தை பார்த்துவிட்டு, தொடருந்தை நிறுத்த முற்பட்டார். ஆனால் அவருக்கு போதிய நேர அவகாசம் இல்லாததால், தொடருந்து அச்சிறுமி மீது ஏறி அவரை கடந்தது.
உடனடியாக உதவிக்குழு அழைக்கப்பட்டது. சிறுமி படுகாயமடைந்திருப்பார் அல்லது இறந்திருப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அச்சிறுமி காயங்கள் எதுவும் இன்றி உயிர் தப்பியுள்ளார்.
சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார்.
விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், தொடருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவை ஆராய்ந்தனர். அதில் தற்கொலைக்கு முயன்ற சிறுமியின் கையை பிடித்து இழுத்து அவரை தற்கொலை செய்ய விடாமல் மற்றைய சிறுமி தடுத்துள்ளமை பதிவாகியுள்ளது.
விசாரணைகள் இடம்பெற்று வருகிறது