கொள்ளையர்கள் இருவரை காவல்துறை அதிகாரி ஒருவர் துணிச்சலாக செயற்பட்டு மடக்கிப் பிடித்துள்ளார்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை Choisy-le-Roi நகரில் உள்ள ‘சிகரெட்’ விற்பனை நிலையம் ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காலை 8 மணி அளவில், இரு கொள்ளையர்கள் இங்குள்ள ஒரு சிகரெட் விற்பனை நிலையத்துக்கு வந்துள்ளனர். பின்னர் அங்கு பணி புரியும் ஊழியர் ஒருவரை தாக்கிவிட்டு, கைத்துப்பாக்கி ஒன்றினால் ஊழியரை மிரட்டி சிகரெட் பெட்டிகள், பணம் போன்றவற்றை கொள்ளையடித்தனர்.
அப்போது, காவல்துறை அதிகாரி ஒருவர் குறித்த சிகரெட் விற்பனை நிலையத்துக்கு எதிர்பாரா விதமாக வருகை தந்துள்ளார். அங்கு கொள்ளையர்களை பார்த்ததும், அதிகாரி உடனடியாக செயற்பட்டு கொள்ளை தடுக்க முயன்றார்.
கொள்ளையர்களில் ஒருவனை கீழே தள்ளி வீழ்த்தி, அவனை மடக்கி பிடித்துள்ளார். இரண்டாமவன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான்.
அதற்கிடையில் சக காவல்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு கொள்ளையன் கைது செய்யப்பட்டான். தப்பி ஓடிய மற்றொரு கொள்ளையன் சில நிமிடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டான்.
இச்சம்பவத்தின் போது குறித்த காவல்துறை அதிகாரி கடமையில் இருக்கவில்லை எனவும், சாதாரண உடையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது துணிச்சலான செயற்பாட்டினால் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.