ஜூலையில் தொடங்கவுள்ள உலக விளையாட்டு விழா "போர்க்கால ஒலிம்பிக்" என்று வர்ணிக்கப்பட்டுவரும்

நிலையில், அதன் பாதுகாப்புத் தொடர்பாகப் பிரான்ஸ் தீவிர கவனம் செலுத்திவருகிறது.

போட்டிகளைப் பாதுகாப்பான சூழ்நிலையில் நடத்தி முடிப்பதற்கு உதவுவதற்காகச் "சில வெளிநாடுகளின்" படைவீரர்கள் பாரிஸ் வருகைதரவுள்ளனர் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது. மிகப் பிரமாண்டமான நிகழ்வுகளின் போது இவ்வாறு வெளிநாட்டுப் படைகள் உதவிக்கு வருவது வழக்கம் என்று பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டிருக்கின்றனர். கட்டாரில் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி நடைபெற்ற சமயம் பிரான்ஸின் ஜொந்தாம் வீரர்கள் பாதுகாப்புப் பணிக்காக அங்கு அனுப்பப்பட்டனர் என்பதை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 11 வரை போட்டிகளின் போது தேவைப்படும் இடங்களில் பாதுகாப்பை ஸ்திரப்படுத்துவதற்குப் பல நாடுகள் உதவவுள்ளன. மோப்ப நாய்களையும் வழங்கவுள்ளன என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

போலந்து அரசு அதன் விசேட துருப்பினர்களைப் பாரிஸுக்கு அனுப்பவுள்ளது. ஆயினும் எத்தனை பேர் வருகைதருவர் என்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

பாரிஸில் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிப்பது மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதே தமது படை அணியின் நோக்கம் என்று போலந்துப் பாதுகாப்பு அமைச்சர் கூறியிருக்கிறார். ஜேர்மனியும் ஒரு தொகுதிப் பொலீஸ் வீரர்களைப் பாரிஸுக்கு அனுப்பவுள்ளது.

பிரான்ஸின் பாதுகாப்பு அமைச்சரது தகவலின் படி, 45 ஆயிரம் பொலீஸ் மற்றும் ஜொந்தாமினர்களை விட மேலும் 18 ஆயிரம் படைவீரர்களும் ஒலிம்பிக் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வான்வழிக் கண்காணிப்புக்குப் பொறுப்பான மூவாயிரம் விமானிகளும் இதில் அடங்குவர். சுமார் பத்தாயிரம் படை வீரர்கள் தங்குவதற்காக Bois de Vincennes பகுதியில் மரங்களால் சூழப்பட்ட புல் வெளியில் (Pelouse de Reuilly) தற்காலிக முகாம் நிறுவப்பட்டவுள்ளது.

இவர்களை விட18 ஆயிரம் முதல் 22 ஆயிரம் பேர் வரையான தனியார் பாதுகாப்புச் சேவையாளர்களும் கடமைக்காக இணைக்கப்படவுள்ளனர்.

பல லட்சம் ரசிகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் போட்டிகள் நடைபெறுகின்ற பகுதிகளைச் சூழ வசிப்போர் என அனைவருமே பாதுகாப்புப் படையினரால் வடிகட்டிச் சோதனையிடப்படுவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

மொஸ்கோவில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல், மற்றும் நாட்டில் பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டு வருகின்ற வெடிகுண்டு அச்சுறுத்தல் போன்றவற்றை அடுத்து பிரான்ஸ் கடந்த வாரம் முதல் அதன் பாதுகாப்பு நிலையை அதிகபட்ச எச்சரிக்கை (alerte maximale) அளவுக்கு உயர்த்தியிருக்கிறது.

ஒலிம்பிக் வரலாற்றில் இதற்கு முன்னர்

1972 இல் மியூனிச்சிலும் (Munich), 1996 இல் அட்லான்டாவிலும் (Atlanta) போட்டிகள் நடைபெற்ற சமயத்தில் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன.